புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் எம்.பி. தொகுதியான வாராணசியின் மண்டல ஆணையர் எஸ்.ராஜலிங்கம், கான்பூருக்கு மாற்றப்பட்டுள்ளார். கான்பூரிலிருந்த மற்றொரு தமிழரான கே.விஜயேந்திர பாண்டியன் புதிய மண்டல ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் 2009-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி எஸ்.ராஜலிங்கம். தென்காசியின் கடையநல்லூரைச் சேர்ந்த இவர், பிரதமர் நரேந்திர மோடியின் எம்.பி. தொகுதியான வாராணசியில் நவம்பர் 2022முதல் ஏப்ரல், 2025 வரை ஆட்சியராக பதவி வகித்தார். இதையடுத்து அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது.
இருப்பினும், அதே வாராணசி மண்டலத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டார். அங்கு பல வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டதே இதற்கு காரணம். வாராணசி மண்டல ஆணையர், அங்குள்ள காசி விஸ்வநாதர் கோயில் நிர்வாகக் குழுவின் தலைவராகவும் இருப்பார். அந்த வகையில் காசி விஸ்வநாதர் கோயிலிலும் வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தினார்.
பிரதமர் மோடிக்கு உள்ள தமிழ் மீதான ஆர்வத்தால் வாராணசியில் நவம்பர் 2022-ல் காசி தமிழ் சங்கமம் தொடங்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து 4 சங்கமங்களையும் அதிகாரி ராஜலிங்கம் பொறுப்பேற்று நடத்தி இருந்தார். இந்நிலையில், ராஜலிங்கம் உ.பி.யின் முக்கியத் தொழில் நகரமான கான்பூரின் மண்டல ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
கான்பூரிலிருந்த மற்றொரு தமிழரான மண்டல ஆணையர் கே.விஜயேந்திர பாண்டியன், வாராணசிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரிடம் ஏற்கெனவே கூடுதலாக 17 பொறுப்புகள் உள்ளன. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அபிமானம் பெற்றவராகக் கருதப்படும் பாண்டியன், தற்போது பிரதமர் தொகுதியின் பணியிலும் பாராட்டுகளைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2008-ல் ஐஏஎஸ் அதிகாரியாகி, உ.பி. மாநிலப் பிரிவில் பணியாற்றும் பாண்டியன் சிவகங்கையைச் சேர்ந்தவர். இவரது தந்தை எஸ்.கற்பூர சுந்தர பாண்டியன் தமிழகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி.
உ.பி.யின் மேலும் 2 ஐஏஎஸ் மற்றும் ஒரு ஐபிஎஸ் தமிழர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், ஜோன்பூர் ஆட்சியரான சென்னையைச் சேர்ந்த என்.சாமுவேல் பால், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் ஆணையர் மற்றும் பதிவாளராகி உள்ளார். அருப்புக்கோட்டையைச் சேர்ந்த டாக்டர்.ஆர்.ராஜகணபதி, சீதாபூர் ஆட்சியர் பணியிலிருந்து, உ.பி. நகர்ப்புற வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்புத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முராதாபாத் டிஐஜியான ஜி.முனிராஜ், பரேலியின் டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். தர்மபுரியின் அக்ரஹாரப் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த இவர், ஏற்கெனவே பரேலி மாவட்டத்தில் எஸ்எஸ்பியாக இருந்தார். அப்போது (2017-ல்) மதநல்லிணத்துக்கு தடையாக இருந்ததாக ஆளும் பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட சிலர் மீதும் முனிராஜ் வழக்கு பதிவு செய்திருந்தார். இதனால், அவர் ‘உபி சிங்கம்’ என அழைக்கப்படுகிறார்.