‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, மக்களவையில் நேற்று சிறப்பு விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி.படம்: பிடிஐ

 
இந்தியா

‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டு விழாவையொட்டி சிறப்பு விவாதம்: பாரதியாருக்கு பிரதமர் மோடி புகழாரம்

மக்களவையில் ‘தாயின் மணிக்கொடி பாரீர்’ பாடலை பாடினார்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசியக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார், வந்தே மாதரத்தை தமிழில் மொழிபெயர்த்தார். வந்தே மாதரம் மீதான அவரது மரியாதை அவரது அனைத்து தமிழ் தேசபக்தி பாடல்களிலும் தெளிவாகத் தெரிகிறது என்று மக்களவையில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். பாரதியாரின் ‘தாயின் மணிக்கொடி பாரீர்’ பாடலையும் அவர் பாடினார்.

வங்கமொழிக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி கடந்த 1875 நவம்பர் 7-ம் தேதி ‘வந்தே மாதரம்’ பாடலை எழுதினார். இந்த பாடலுக்கு ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்தார். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இப்பாடல் மிகுந்த உத்வேகம் அளித்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1950 ஜனவரி 24-ம் தேதி இது தேசியப் பாடலாக அறிவிக்கப்பட்டது. வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மக்களவையில் இது குறித்த சிறப்பு விவாதம் நேற்று நடைபெற்றது.

விவாதத்தை தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசியதாவது: வந்தே மாதரம் பாடலின் 50-வது ஆண்டில் நாடு அடிமைத்தனத்தில் இருந்தது. 100-வது ஆண்டு நிறைவில், அவசரநிலையின் பிடியில் இருந்தோம். அந்த இருண்ட காலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் கழுத்து நெரிக்கப்பட்டது. தேச பக்தர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இப்போது 150-வது ஆண்டு நிறைவை உற்சாகமாக கொண்டாடுகிறோம். வந்தே மாதரம் பாடல் ஒரு மந்திரம். சுதந்திரப் போராட்டத்துக்கு உத்வேகம் கொடுத்த முழக்கம்.

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவை பலவீனமானதாக, பயனற்றதாக, சோம்பேறியாக, செயலற்றதாக சித்தரிக்கும் வழக்கம் இருந்தது. இந்த தாழ்வுமனப்பான்மையை அகற்றவும், இந்தியாவின் வலிமையை நிரூபிக்கவுமே வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டது. சக்திவாய்ந்த இந்த பாடல் ஆங்கிலேயர்களை உலுக்கியது. அவர்கள் இந்த பாடலுக்கு தடை விதித்தனர். பாடலை பாடியவர்களுக்கு கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டன. லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸில் வந்தே மாதரம் பாடலை வீர சாவர்க்கர் பாடினார். பிபின் சந்திரபால் மற்றும் மகரிஷி அரவிந்தர் ஆகியோர் ‘வந்தே மாதரம்’ பெயரில் நாளிதழை தொடங்கினர். கடந்த 1905-ல் வந்தே மாதரத்தை தேசியப் பாடலாக மகாத்மா காந்தி ஏற்றுக் கொண்டார்.

சுதேசி இயக்கத்தின் ஒரு பகுதியாக கடந்த 1907-ம் ஆண்டு தமிழகத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளை இயக்கிய கப்பலில், வந்தே மாதரம் என்று பெயர் பொறிக்கப்பட்டது. தேசியக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார், வந்தே மாதரத்தை தமிழில் மொழிபெயர்த்தார். வந்தே மாதரம் மீதான அவரது மரியாதை அவரது அனைத்து தமிழ் தேசபக்தி பாடல்களிலும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. ‘தாயின் மணிக்கொடி பாரீர், அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்’ என்று முழங்கினார். இந்தியர்கள் அனைவரது மனதிலும் இப்பாடல் ஆழமாகப் பதிந்துள்ளது.

ஆனால், கடந்த நூற்றாண்டில் இந்த பாடலுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது. இப்பாடலை முஸ்லிம் லீக் கடுமையாக எதிர்த்தது. 1937 அக்டோபர் 15-ம் தேதி வந்தே மாதரத்துக்கு எதிரான முழக்கத்தை லக்னோவில் இருந்து முகமது அலி ஜின்னா எழுப்பினார். தனது அரியணை ஆட்டம் காண்பதை உணர்ந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் நேரு, முஸ்லிம் லீக்கின் எதிர்ப்புக்கு பதிலடி கொடுக்கவில்லை. மாறாக, வந்தே மாதரம் பாடல் குறித்த விசாரணையை தொடங்கினார். அக்டோபர் 20-ம் தேதி சுபாஷ் சந்திர போஸுக்கு நேரு கடிதம் எழுதினார். அதில், ஜின்னாவின் உணர்வுகளுடன் நேரு உடன்பட்டார். வந்தே மாதரத்தின் பின்னணி, முஸ்லிம்களை எரிச்சலடையச் செய்யலாம் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

வந்தே மாதரம் பாடலை மறுபரிசீலனை செய்ய அக்டோபர் 26-ம் தேதி கொல்கத்தாவில் காங்கிரஸ் செயற்குழுகூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் தேசபக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். துரதிர்ஷ்டவசமாக, அக்டோபர் 26-ம் தேதி வந்தே மாதரம் பாடலின் பிரதியை காங்கிரஸ் கிழித்தது. இது சமூக நல்லிணக்கத்துக்கான செயல் என்று விளக்கம் அளித்தது.

உண்மையை சொல்வதென்றால், முஸ்லிம் லீக்கிடம் காங்கிரஸ் சரணடைந்தது. இதே நிலை நீடித்து, இந்தியா இரண்டாகப் பிளவுபடுவதற்கும் காங்கிரஸ் அடிபணிந்தது. காங்கிரஸ் கட்சி படிப்படியாக உருமாறி முஸ்லிம் லீக் ஆக மாறிவிட்டது. இப்போதும்கூட, காங்கிரஸும், அதன் கூட்டணி கட்சிகளும் வந்தே மாதரம் பாடல் குறித்து சர்ச்சையை உருவாக்க முயற்சி செய்கின்றன. 2047-ல் வளர்ந்த இந்தியாவை உருவாக்க நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். ‘சுயசார்பு இந்தியா’ என்ற நமது கனவை நனவாக்க வந்தே மாதரம் நமக்கு உத்வேகம் அளிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

விவாதத்தில் மற்ற கட்சி உறுப்பினர்கள் பேசியதாவது:

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி: தற்போது வந்தேமாதரம் குறித்து விவாதம் நடப்பதற்கு முக்கிய பின்னணி காரணம் இருக்கிறது. மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதே காரணம். தவிர, பிரதமர் வரலாற்றை திரித்துப்பேசுகிறார். காங்கிரஸ் கூட்டங்களில் மட்டுமே வந்தே மாதரம் பாடப்பட்டது. ஆர்எஸ்எஸ் கூட்டங்களில் பாடவில்லை.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்: வந்தே மாதரம் பாடல் ஒட்டுமொத்த நாட்டுக்கும் சொந்தமானது. இதை பயன்படுத்தி நாட்டின் பிரிவினையைத் தூண்ட முயற்சிக்க வேண்டாம். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள், தேசபக்தி குறித்து பாடம் நடத்துவது வேடிக்கை. இவ்வாறு அவர்கள் பேசினர்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், திமுக எம்.பி. ஆ.ராசா, காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகோய் உள்ளிட்டோரும் பேசினர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விவாதத்தில் பேசவில்லை.

SCROLL FOR NEXT