வீரதீரச் செயலுக்கான தேசிய சிறார் விருதை சிறுமி வியோமா பிரியாவின் தாய் அர்ச்சனாவிடம் வழங்கிய குடியரசுத் தலைவர் முர்மு. (உள்படம்) உயிரிழந்த சிறுமி வியோமா பிரியா.
புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள், வீரதீரச் செயல்கள் புரிந்த சிறுவர், சிறுமிகள் உட்பட 20 பேருக்கு தேசிய சிறார் விருதுகளை டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
வீரம், கலை - கலாச்சாரம், சமூகசேவை, அறிவியல்- தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் சிறாருக்கு ஆண்டுதோறும் தேசிய சிறார் விருது (ராஷ்டிரிய பால புரஸ்கார்) வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 18 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 20 பேர் தேசிய சிறார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்த விழாவில் அவர்களுக்கு விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். விருது பெற்ற சிறாருக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
விளையாட்டுத் துறையில் சாதனை படைத்ததற்காக பிஹாரை சேர்ந்த 14 வயதான இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு தேசிய சிறார் விருது வழங்கப்பட்டது. பஞ்சாபின் பெரோஸ்பூர் மாவட்டம், மம்டோட் கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் ஷ்ரவன் சிங், ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது இந்திய ராணுவ வீரர்களுக்கு குடிநீர், பால், தேநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார். இதற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது.
மகாராஷ்டிராவை சேர்ந்த ஆரவ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதுமை கண்டுபிடிப்புக்காக விருது பெற்றார். உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த 9 வயது சிறுவன் அஜய் ராஜ், முதலையிடம் இருந்து தந்தையை காப்பாற்றியதற்காக விருது வழங்கப்பட்டது. கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்த 11 வயது சிறுவன் முகமது சிதான், மின்சார தாக்குதலில் இருந்து 2 சிறுவர்களை காப்பாற்றியதற்காக விருது வழங்கப்பட்டது. ஆந்திராவை சேர்ந்த பாரா விளையாட்டு தடகள வீராங்கனை ஷிவானி ஹொசூரு உப்பாரா, அசாமின் யூ-டியூப்பிரபலம் எஸ்தர், மேற்கு வங்கத்தை சேர்ந்த தபேலா இசைக்கலைஞர் சுமன் சர்க்கார், உத்தர பிரதேசம் பாராபங்கியை சேர்ந்த இளம் விஞ்ஞானி பூஜா, சண்டிகரை சேர்ந்த இளம் சமூக சேவகர் வன்ஷ், ஒடிசாவை சேர்ந்த பளு தூக்கும் வீராங்கனை ஜோஸ்னா, அசாமை சேர்ந்த இளம் விஞ்ஞானி ஜஷி பிரிஷாபோரா, ஜார்க்கண்டை சேர்ந்த கால்பந்து வீராங்கனை அனுஷ்கா, சத்தீஸ்கரை சேர்ந்த ஜூடோ வீராங்கனை யோகிதா, தெலங்கானாவை சேர்ந்த மலையேற்ற வீரர் விஸ்வநாத் கார்த்திகேய படகந்தி, குஜராத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை வாகா லட்சுமி பிரக்னிகா உள்ளிட்டோர் தேசிய சிறார் விருதை பெற்றுக் கொண்டனர்.
சூர்யவன்ஷியின் சாதனைகள்: பிஹார் மாநிலத்தை சேர்ந்த 14 வயது இளம் வீரரான வைபவ்சூர்யவன்ஷி 4 வயது முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் சூர்யவன்ஷி, இளம் வயதில் 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியிலும் அவர் சதம் விளாசினார். அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 84 பந்துகளில் 190 ரன்கள் குவித்து சாதனை புரிந்தார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 150 ரன்களை (59 பந்துகளில்) கடந்தவர் என்றபுதிய சாதனையையும் அவர்படைத்தார். தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸின் சாதனையை (64 பந்துகளில் 150 ரன்களை கடந்தது) வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவனை காப்பாற்ற உயிர்த் தியாகம் செய்த கோவை சிறுமிக்கு விருது: கோவை சரவணம்பட்டி அருகே ராணுவவீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் 400 குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த 2024 மே 23-ம் தேதி இங்குள்ள பூங்காவில் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த பிரசாந்த் ரெட்டி மகன் ஜியான்ஸ் ரெட்டி (6), நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த அர்ச்சனா சிவராமகிருஷ்ணன் மகள் வியோமா பிரியா (8) உள்ளிட்ட குழந்தைகள் விளையாடிக் கொண்டுஇருந்தனர்.
அப்போது, தரைக்கு அடியில் அமைக்கப்பட்ட மின் வயர்கள் சேதமானதால் மின் கசிவு ஏற்பட்டு, பூங்காவில் உள்ள இரும்பு சறுக்கு மரத்தில் மின்சாரம் பாய்ந்திருந்தது. இதை அறியாமல் சறுக்கு மரத்தில் ஏறிய சிறுவன் ஜியான்ஸ் ரெட்டி மீது மின்சாரம் பாய்ந்தது. அவனைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடினார் சிறுமி வியோமா பிரியா. அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் இரு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுமி வியோமா பிரியாவுக்கு வீர தீரச் செயலுக்கான தேசிய சிறார் விருது அறிவிக்கப்பட்டது. டெல்லியில் நேற்று நடந்த விழாவில், சிறுமி சார்பில், தாய் அர்ச்சனாவிருதைப் பெற்றுக் கொண்டார். ‘‘மகளை இழந்த சோகம் இருந்தாலும், அவளுக்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்று அர்ச்சனா கூறினார்.