டேராடூன்: உத்தராகண்ட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிய இடத்தில், சுத்திகரிப்பு சடங்கு நடத்தப்பட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, உத்தராகண்ட் கலாச்சாரம் என்பது சாதியவாதமும் பாகுபாடும் கொண்டது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலித் என்பதால் உத்தராகண்ட்டில் அவர் பேசிய ராம் லீலா மைதானத்தில் சுத்திகரிப்பு சடங்கு நடத்தப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “காங்கிரஸ் இப்போது தாஜா செய்யும் அரசியலில் இறங்கியுள்ளது. உத்தராகண்டின் கலாச்சாரம் சாதியவாதமும் பாகுபாடும் கொண்டதல்ல. மாறாக அது சமூகத்துடன் ஒன்றிணையும் கலாச்சாரம்.
இந்தப் பிரச்சினைக்கு சாதியவாதச் சாயம் பூசி, சமூகத்தைப் பிளவுபடுத்த காங்கிரஸ் முயல்கிறது. தேவபூமியான உத்தராகண்ட் இதை ஒருபோதும் ஏற்காது. உத்தராகண்ட் மக்கள் தேசியத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர். காங்கிரஸின் இந்தப் பிளவுபடுத்தும் சிந்தனையை அவர்கள் நிச்சயம் தகர்ப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ராம் லீலா மைதானத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுத்திகரிப்பு சடங்குக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அம்மாநில அமைச்சர் கஜன்தாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “உத்தராகண்ட்டின் ஹல்த்வானியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டதை அடுத்து அங்கு 'சுத்திகரிப்பு' சடங்கு நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம் பாஜக கார்கேவை அவமதித்துவிட்டதாகவும் ராகுல் காந்தி கூறி இருக்கிறார். இது முழுக்க முழுக்க வதந்தி.
தலித் சமூகத்தினரை ராகுல் காந்தி தவறாக வழிநடத்த முயல்கிறார். கார்கேவை அவமதிக்கும் நோக்கில் பாஜக எதையும் செய்யவில்லை. இந்தs சம்பவத்துக்கும் பாஜக -வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பாரதிய ஜனதா கட்சி இதிலிருந்து தன்னை முழுமையாக விலக்கிக் கொள்கிறது. அந்த இடத்தில் ஏதேனும் ஓர் அமைப்பு 'ஹோமம்' அல்லது சுத்திகரிப்புச் சடங்கை நடத்தியிருந்தால், அது அவர்களின் சொந்த விஷயம். இருப்பினும், இத்தகைய தவறான தகவல்களைப் பரப்புவது சரியல்ல” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தலித் மக்கள் கொடுமைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகும் கூட, இன்றும் அவர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.
ராஜஸ்தான் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் டிகாராம் ஜூலி ஒரு கோயிலுக்குச் சென்றபோது, பாஜக தலைவர்கள் அங்கு 'சுத்திகரிப்பு' சடங்குகளைச் செய்தார்கள்.
பிஹார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி ஒரு கோயிலுக்குச் சென்றபோது அங்கேயும் சுத்திகரிப்பு செய்யப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தராகண்ட்டின் ஹல்த்வானியின் உள்ள ராம் லீலா மைதானத்தில் உரையாற்றியதை அடுத்து, அங்கும் சுத்திகரிப்பு செய்யப்பட்டது.
இவை பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களால் செய்யப்படுகின்றன; இந்திய அரசியலமைப்பின்படி இது ஒரு குற்றமாகும்.
ஆகஸ்ட் 13 அன்று, இந்தச் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, அந்தச் சுத்திகரிப்பு நிகழ்வு ஒரு குற்றம் என்றும், அது தனக்கும் நாட்டின் ஒவ்வொரு தலித் மக்களுக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என்றும் கூறினார்.
ஆனால், உத்தராகண்ட் மாநில பாஜக தலைவர், சுத்திகரிப்பு செய்யப்பட்டது உண்மைதான் என்றும், அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் வெளிப்படையாகக் கூறுகிறார்.
எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் 'சுத்திகரிப்பு' செய்வது ஒரு குற்றம். ஆனால் ராம் லீலா மைதான சுத்திகரிப்பு விவகாரத்தில் 20 நாட்கள் கடந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உத்தராகண்டில் சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அவர்கள் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும்.” என்று வலியுறுத்தி இருந்தார்.