இந்தியா

சொத்து பதிவு செய்ய சாட்சிகள் தேவை இல்லை என திருத்தம் கொண்டுவர உ.பி அரசு திட்டம்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: சொத்து பத்திரப் பதிவு செய்யும்போது, பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு இரண்டு சாட்சிகளை அழைத்து வர வேண்டும் என்ற கட்டாயத்தை நீக்க உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் மக்கள் தங்கள் சொத்துகளைப் பதிவு செய்யும்போது, இரண்டு சாட்சிகளை பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு அழைத்து வர வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில், ஏதேனும் வில்லங்கம் ஏற்பட்டால் தங்களுக்கு சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சம் பரவலாக இருப்பதால், சொத்துகளை பதிவு செய்பவர்கள் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.

இதனால், சொத்து பத்திரப் பதிவு செய்யும்போது, பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு இரண்டு சாட்சிகளை அழைத்து வர வேண்டும் என்ற கட்டாயத்தை நீக்க உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய நடைமுறையின்படி, சொத்து வாங்குபவர்கள் பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு ஒரு சாட்சியைக்கூட அழைத்து வர வேண்டிய அவசியம் இருக்காது. சொத்துப் பதிவு நடைமுறை, விற்பவர் மற்றும் வாங்குபவரின் ஆதார் அடிப்படையிலான 'இ-கேஒய்சி' மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும்.

சொத்துகளை போலியாகப் பதிவு செய்வதைத் தடுப்பதற்காக, ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறை மாநிலத்தில் ஏற்கெனவே அமலில் உள்ளது. ஆன்லைன் மூலம், ஆதார் அடிப்படையிலான 'இ-கேஒய்சி' முறையைப் பயன்படுத்தி வாங்குபவர் மற்றும் விற்பவரின் அடையாளத்தை முழுமையாகச் சரிபார்க்க முடியும்.

இதனால், அண்டை மாநிலங்களான மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இரண்டு சாட்சிகளை அழைத்து வர வேண்டிய கட்டாயம் நீக்கப்பட்டுள்ளது.

இதே நடைமுறையை உத்தரப் பிரதேசத்திலும் அமல்படுத்த அம்மாநில அரசு தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது குறித்து முத்திரை மற்றும் பதிவுத் துறை அமைச்சர் ரவீந்திர ஜெய்ஸ்வால் கூறுகையில், “மாநிலத்தில் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால், இனி இரண்டு சாட்சிகள் மூலம் அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவைப் போலவே, உத்தரப் பிரதேசத்திலும் சொத்துப் பதிவின்போது இரண்டு சாட்சிகளை அழைத்து வர வேண்டிய கட்டாயத்திலிருந்து மக்களை விடுவிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏற்ப விதிகளைத் திருத்துவதற்கான முன்மொழிவு குறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம்.

மேலும், அலுவலக நேரத்தைத் தாண்டி, ஞாயிற்றுக்கிழமைகள் போன்ற விடுமுறை நாட்களிலும் சொத்துப் பதிவு வசதிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் மூலம், பணிக்குச் செல்பவர்கள், சொத்துப் பதிவுக்காக விடுப்பு எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. அவர்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில், சொத்துகளைப் பதிவு செய்துகொள்ள முடியும்.” என்று தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT