இந்தியா

அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: வரி விவகாரத்தை ஆய்வு செய்கிறது இந்தியா!

மத்திய வர்த்தக அமைச்சகம் தகவல்

மோகன் கணபதி

புதுடெல்லி: வரிகள் தொடர்பான அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, அதிபர் ட்ரம்ப்பின் செய்தியாளர் சந்திப்பு என இது தொடர்பாக நடைபெற்று வரும் அனைத்து விவகாரங்களையும் ஆய்வு செய்து வருகிறோம் என்று மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘வரிகள் தொடர்பாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பை நாங்கள் கவனித்தோம். இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அமெரிக்க நிர்வாகத்தால் சில நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முன்னேற்றங்களையும் அவற்றின் தாக்கங்களையும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

          

அமெரிக்​க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சர்​வ​தேச அவசர​கால பொருளா​தார அதி​காரச் சட்​டத்​தின் (ஐஇஇபிஏ) கீழ், பரஸ்பர வரி விதிப்பு முறையை கொண்டு வந்தார். இந்த சட்டத்தின் கீழ், பல்வேறு நாடுகளுக்கும் அவற்றை அச்சுறுத்தும் வகையில் வரிகளை விதித்தார். ரஷ்​யாவிடம் இருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்ததால், இந்​தியா மீதான வரியை 50% ஆக உயர்த்தினார். இதுபோல், பல நாடுகளுக்கும் அவர் வரியை நிர்ணயித்தார்.

அமெரிக்க நாடாளு​மன்​றத்​தின் ஒப்​புதல் இல்​லாமல் இவ்வாறு வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து ‘லேர்​னிங் ரிசோர்​சஸ், வி.ஓ.எஸ் செலக்​சன்ஸ் என்ற நிறு​வனங்​கள் வழக்கு தொடர்ந்​தன. இதை விசா​ரித்த உச்சி நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலை​மையி​லான அமர்வு, வரி​களை விதிக்​கும் அதி​காரம் நாடாளுமன்றத்துக்கே உள்​ளது; ஐஇஇபிஏ சட்​டம் அதிபருக்கு வரி​களை விதிக்க அனு​மதி அளிக்​க​வில்லை என்று தனது உத்தரவில் தெளிவுபடுத்தியது.

இந்த தீர்ப்பால் கடும் அதிருப்தி அடைந்த ட்ரம்ப், வேறு ஒரு சட்டத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்ட அனைத்து நாடுகளுக்கும் 10% வரி விதிப்பதாக அறிவித்தார்.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ‘‘1974-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வர்ததக சட்டத்தின் பிரிவு 122-ன் கீழ், 150 நாட்களுக்கு பயன்படுத்துவதற்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி உள்ளேன். இதன்படி, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்ட நாடுகளுக்கான வரி 10% ஆக இருக்கும்’’ என அறிவித்தார்.

இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகாத நிலையில், இந்தியாவுக்கான இறக்குமதி வரி எவ்வாறு இருக்கும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த டொனால்டு ட்ரம்ப், ‘‘எதுவும் மாறாது. அவர்கள் வரிகளைச் செலுத்துவார்கள். நாங்கள் வரிகளை செலுத்த மாட்டோம். இது முன்பு இருந்ததற்கு நேர்மாறானது.

இந்திய பிரதமர் மோடி ஒரு சிறந்த மனிதர். அவரை எதிர்க்கும் மக்களைவிட அவர் புத்திசாலி. அவர் எங்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருந்தார். எனவே, நாங்கள் இந்தியாவுடன் ஓர் ஒப்பந்தம் செய்தோம். அது இப்போது ஒரு நியாயமான ஒப்பந்தம். அவர்கள் வரி செலுத்துகிறார்கள். நாங்கள் வரிகளை செலுத்த மாட்டோம். இந்தியா உடனான ஒப்பந்தம் தொடங்கிவிட்டது. அனைத்து ஒப்பந்தங்களும் தொடங்கி உள்ளன’’ என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், ‘‘அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்ட அனைத்து நாடுகளுக்குமான தற்காலிக வரி 10% ஆக குறைகிறது. இந்தியாவுக்கும் இது பொருந்தும்’’ என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பல்வேறு நாடுகளுக்கு விதித்த வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி இன்று வலியுறுத்தியது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், ‘‘வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அந்நாட்டுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இந்திய அரசு நிறுத்திவைக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

மேலும், (இந்திய - அமெரிக்க) கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களப் பயன்படுத்தி, விவசாயப் பொருட்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்வதில் அமரிக்காவுக்கு உள்ள சுதந்திரத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இந்தப் பின்னணியில், வரி விதிப்பு தொடர்பாக ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களை ஆராய்ந்து வருவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT