

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பல்வேறு நாடுகளுக்கு விதித்த வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், ‘‘வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அந்நாட்டுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இந்திய அரசு நிறுத்திவைக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
மேலும், (இந்திய-அமெரிக்க) கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களப் பயன்படுத்தி, விவசாயப் பொருட்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்வதில் அமரிக்காவுக்கு உள்ள சுதந்திரத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வரிக் கொள்கையை நேற்று ரத்து செய்தது. அதன் பிறகு பேசிய அதிபர் ட்ரம்ப், ‘பிரதமர் மோடி எனது மிகவும் நல்ல நண்பர். இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டபடி தொடரும். இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மீதான வரிகளை அமெரிக்கா அதிகரிக்கும் என்று கடந்த மே 10, 2025 அன்று அச்சுறுத்தியதன் காரணமாக, அவர் (பிரதமர் மோடி) தனிப்பட்ட முறையில் ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தினார்.
பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதை காரணமாகவும், அவரது வேண்டுகோளின் பேரிலும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்...’ என்று தெரிவித்துள்ளார்.
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் பிப்ரவரி 2, 2026 அன்று அறிவித்தார். மோடியின் வேண்டுகோளுக்காகவே உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஒப்பந்தத்தை ஏற்றதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
எதற்காக ட்ரம்ப்புக்கு மோடி வேண்டுகோள் விடுக்க வேண்டும்? இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை கட்டாயப்படுத்தியது எது? அன்று மதியம் மக்களவையில் என்ன நடந்தது? வெள்ளை மாளிகையில் தனது "நல்ல நண்பரை" தொடர்பு கொண்டு பிரதமர் மோடி ஏன் கவனத்தை சிதறடிக்கச் செய்தார்?
பிரதமர் மோடி தனது பலவீனமான பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ள இவ்வளவு ஆர்வம் காட்டாமல், இன்னும் 18 நாட்கள் காத்திருந்திருந்தால், இந்திய விவசாயிகள் இந்த துன்பத்திலிருந்தும் நெருக்கடியிலிருந்தும் தப்பித்திருக்க முடியும்.
மேலும் இந்தியாவின் இறையாண்மையும் பாதுகாக்கப்பட்டிருக்கும். பிரதமரின் பொறுமையின்மை மற்றும் சரணடைதல் காரணமாக இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நாட்டுக்கு ஒரு கடினமான சோதனையாக மாறியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு என்ன?
அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் தனது இஷ்டத்துக்கு இந்த வரி விதிப்பை ட்ரம்ப் உயர்த்தினார். இதை எதிர்த்து ‘லேர்னிங் ரிசோர்சஸ், வி.ஓ.எஸ் செலக்சன்ஸ் என்ற நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகள் ஒன்றிணைக்கப்பட்டு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன.
சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (ஐஇஇபிஏ) கீழ், ஒரு அதிபர் தனது நிர்வாக உத்தரவின் மூலம் இத்தகைய வரிகளை விதிக்க அதிகாரம் உள்ளதா என்பதை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்தது.
இதை விசாரித்த தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையிலான அமர்வு, வரிகளை விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது. ஐஇஇபிஏ சட்டம் அதிபருக்கு வரிகளை விதிக்க அனுமதி அளிக்கவில்லை என்று கூறியது. இந்த தீர்ப்பில் மாறுபட்ட கருத்தை தெரிவித்த ஒரு நீதிபதி, ‘இந்தத் தீர்ப்பால் ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட பில்லியன் கணக்கான டாலர்களை இறக்குமதியாளர்களுக்குத் திரும்ப அளிப்பது அரசுக்கு பெரிய ‘தலைவலியாக’ இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், இதுவரை சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட 175 பில்லியன் டாலர் வரிப்பணத்தை அமெரிக்கா இறக்குமதி செய்த நாடுகளின் நிறுவனங்களுக்கு திரும்ப அளிக்க வேண்டி வரும். இது பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமக்கு எதிராக வந்ததையடுத்து, வரி விதிப்பு தொடர்பாகத் தன்னிடம் மாற்றுத் திட்டம் இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்து உள்ளார்.