லக்னோ: லிப்ட் கேட்டு லாரியில் ஏறி, டிரைவரிடமிருந்து ரூ.20 ஆயிரத்தை திருடிய போலீஸ் எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உ.பி. மாநிலம் ஹமீர்பூரை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், அண்மையில் லாரி டிரைவர் ஒருவரிடம் லிப்ட் கேட்டு ஹமீர்பூருக்குச் சென்றுள்ளார். ஹமீர்பூரில் போலீஸ் எஸ்.ஐ இறங்கிய பின்னர் லாரியிலிருந்த தனது பணம் ரூ.20 ஆயிரம் மாயமானதை டிரைவர் அறிந்தார். இதனிடையே அந்த எஸ்.ஐ. தனது வாகனத்தில் ஏறிச் சென்றார்.
இதையடுத்து போலீஸ் எஸ்.ஐ. இந்தப் பணத்தைத் திருடியிருக்கலாம் என்று டிரைவர் சந்தேகித்து எஸ்.ஐ.யை லாரியில் பின்தொடர்ந்தார். சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனத்தை விரட்டிச் சென்று பிடித்து போலீஸ் எஸ்.ஐ.யை டிரைவர் மடக்கினார். அப்போது அவரை சோதனை போட்டதில் அவரது உடையில் ரூ.20 ஆயிரம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் டிரைவரிடமிருந்து பணத்தைத் திருடிய போலீஸ் எஸ்.ஐ. உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக ஹமீர்பூர் கோத்வாலி நகர் போலீஸ் நிலைய அதிகாரி யஷ்பால் சிங் தெரிவித்துள்ளார்.