பாம்புடன் மருத்துவமனை வந்த நபர்

 
இந்தியா

உ.பி.யில் தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த நபர்: அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்!

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் மதுராவில் தன்னை கடித்த பாம்புடன் ஒருவர் சிகிச்சைக்கு சென்றுள்ளார். இதைக் கண்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உ.பி.யின் மதுராவில் இ-ரிக்ஷா ஓட்டுநராக இருப்பவர் தீபக். இவரை பாம்பு ஒன்று கடித்துள்ளது. பாம்பு கடித்த வலிக்கு மத்தியிலும் தனக்கு சரியான சிகிச்சை பெற வேண்டுமானால் மருத்துவர்களுக்கு தன்னை கடித்தது எந்த வகை பாம்பு என்று தெரிய வேண்டும் என்று நினைத்து, அந்த நபர் அந்தப் பாம்பை பிடித்துள்ளார்.

அத்துடன் நில்லாமல், பாம்பை தனது ஸ்வெட்டர் ஜாக்கெட்டின் உள்பையில் போட்டுக் கொண்டு, அந்தப் பாம்புடன் அருகிலுள்ள மதுரா அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்குச் சென்றுள்ளார்.

தன்னைக் கொத்தியப் பாம்பை மருத்துவரிடம் காட்டினால் அதற்கு உகந்த சிகிச்சை பெறலாம் என்பதே தீபக்கின் நோக்கமாக இருந்தாலும் கூட, அவர் ஜாக்கெட்டிலிருந்து பாம்பை எடுத்ததும் மருத்துவர் அலறிபடி அங்கிருந்து ஓடியுள்ளார்.

இதையடுத்து, மதுரா அரசு மருத்துவமனை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு வந்த தலைமை மருத்துவர் பாம்பை வெளியே விட்டு வரும்படி தீபக்கிடம் கூறியுள்ளார்.

இதற்கு மறுத்த தீபக் முதலில் எனக்கு சிகிச்சை அளியுங்கள் என்று கூறியுள்ளார். மற்ற நோயாளிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால், உயிருள்ள பாம்புடன் சிகிச்சை அளிப்பது சாத்தியமற்றது என்று மருத்துவர்கள் கூறியும்கூட, அதைப் புரிந்துகொள்ளாத தீபக், “என்னைக் கடித்த பாம்பைப் பார்க்காமல் விஷத்தை எப்படி அடையாளம் காண்பீர்கள்” என்று வாதிட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில், அவர் தன்னுடைய ஈரிக்ஷாவை மதுரா அரசு மருத்துவமனையின் பிரதான வாசலின் குறுக்கே நிறுத்திவிட்டு தனக்கு சிகிச்சை அளித்தால் தான் நகர்வேன் என்று மிரட்டியுள்ளார்.

வேறுவழியின்றி காவல்துறைக்கு புகார் செய்யப்பட்டது. கூடவே வனத்துறையினரும் அங்கு வந்தனர். தீபக்கை எச்சரித்த காவலர்கள் அவருக்கு நிலைமையைப் புரிய வைத்தனர்.

இதை ஏற்று அவர் சமரசரம் அடைந்து பாம்பை விடுவித்தார். அதன் பின்னரே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தான் கொண்டு வந்த ‘ஆதாரத்தை’ மருத்துவர்கள் புறக்கணிப்பதாக தீபக் உணர்ந்ததால்தான் இந்தப் பிரச்சினை நிகழ்ந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

தற்போது, தீபக்கின் நிலைமை ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் இந்தச் சம்பவம் அப்பகுதி முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

SCROLL FOR NEXT