இந்தியா

தொடர் போராட்டம் எதிரொலி | “நொய்டா, காஜியாபாத்தில் 21 % ஊதிய உயர்வு” - முதல்வர் யோகி

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து, நொய்டா மற்றும் காஜியாபாத்தில் குறைந்தபட்ச ஊதியத்தை 21% என உயர்த்தி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

கவுதம புத்தர் நகர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதில் உபி, ராஜஸ்தான் மற்றும் ஹரியானா தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இதில் அரசு கவனம் செலுத்தாத நிலையில் போராட்டக்காரர்களின் கோபம் வன்முறையாக வெடித்தது. வாகனங்கள் பலவும் தீக்கிரையாக்கப்பட்டு போக்குவரத்தும் முடங்கியது.

          

இதையடுத்து போராட்டக்காரர்களை அழைத்து பேச முதல்வர் யோகி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தற்போது போராட்டம் ஓய்ந்த நிலையில், முதல்வர் யோகி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில், “தொழில்நுட்ப திறன் கொண்ட மற்றும் போதிய தொழில்நுட்பத் திறன் இல்லாத தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 1 முதல் தொழிலாளர்களின் ஊதியத்தில் 21 சதவீதம் இடைக்கால ஊதிய உயர்வை வழங்க உத்தரப்பிரதேச அரசு தீர்மானித்துள்ளது.

நொய்டா மற்றும் காஜியாபாத் பகுதிகளில் உள்ள தொழிலாளர்களின் ஊதியம் (அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி உட்பட) அதிகபட்சமாக 21 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது, நொய்டா மற்றும் காஜியாபாத் பகுதிகளில் தொழில்நுட்பத் திறன் இல்லாத தொழிலாளர்களுக்கு ரூ.13,690, பகுதி அளவில் தொழில்நுட்பத் திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு ரூ.15,059 மற்றும் தொழில்நுட்பத் திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு ரூ.16,868 என இடைக்கால ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பின் கீழ், தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் செயல்முறையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள தொழிலாளர்களுக்கு நியாயமான மற்றும் சமமான ஊதியத்தை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சம் மற்றும் வதந்திகளின் காரணமாக, பேஸ்-2 மற்றும் செக்டார்-62 உள்ளிட்ட பல இடங்களில் தொழிலாளர்கள் வாகனங்களைச் சேதப்படுத்தினர். சில வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பான குழப்பங்களைத் தெளிவுபடுத்துவதற்காக, முதன்மைச் செயலாளர் (தொழிலாளர் நலத்துறை) நொய்டாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். நொய்டா மாவட்ட ஆட்சியர் மேதா ரூபம் மற்றும் பிற நிர்வாக அதிகாரிகளும் தொழிலாளர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினர். தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகிய இரு தரப்பினரின் நலன்களையும் சமநிலைப்படுத்தும் வகையிலான முடிவுகளை எடுக்க விரும்புவதாக அரசு தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச ஊதியத்தில் ஒரு இடைக்கால உயர்வு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, மேலும் பல ஊதிய உயர்வுகள் சாத்தியமாகும். எதிர்காலத்தில், ஊதிய வாரியத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்படும்.

ஊதியங்களைத் தவிர, தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் படிகள் வழங்கப்படும் என்றும் முதல்வர் யோகி உறுதியளித்துள்ளார். பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் முதல்வர் யோகி உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT