இந்தியா

டெல்லியில் வரலாறு காணாத குளிர்: அடுத்த 3 நாட்களுக்கு நீடிக்கும் என எச்சரிக்கை

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: தலைநகர் டெல்​லி​யில் ஜனவரி மாதத்​தில் குளிர் சீராக அதி​கரித்து வரு​கிறது. சனிக்​கிழமை காலை குறைந்​த​பட்ச வெப்​பநிலை 4.2 டிகிரி செல்​சி​யஸாக குறைந்​தது. இது டெல்​லி​யில் குளிர்​காலத்​தில் பதி​வான மிகக் குறைந்த வெப்​பநிலை​யாகும். டெல்​லி​யும் அதன் சுற்​றுப்​புறப் பகு​தி​களும் மூடு​பனி​யுடன் கூடிய குளிர் அலை காரண​மாக நடுங்​கு​கிறது. இத்​துடன் வீசும் பலத்த காற்று குளிரை மேலும் அதி​கரித்​துள்​ளது.

உத்​தரபிரதேசம், பஞ்​சாப், ஹரி​யானா உட்பட வட மாநிலங்​கள் முழு​வதும் அடுத்த 3 நாட்​களுக்கு கடுமை​யான குளிர் அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இந்த மாநிலங்​களி​லும் டெல்​லியைப் போன்​று, மிகக் குளி​ரான காலைப் பொழுது 4.2 டிகிரி செல்​சி​யஸில் பதி​வாகி உள்​ளது.

இந்​திய வானிலை ஆய்வு மையத் தகவலின்​படி வெள்​ளிக்​கிழமை பெய்த வழக்​கத்​துக்கு மாறான மழையை தொடர்ந்து இந்த திடீர் வெப்​பநிலை சரிவு ஏற்​பட்​டுள்​ளது. இந்த மழையே தலைநகர் மற்​றும் அதைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் வெப்​பநிலையை குறைத்​துள்​ளது.

டெல்லி மற்​றும் அதன் சுற்​றுப்​புறப் பகு​தி​களி​லும் நேற்​றைய குளிர் நீடிக்​கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்​சரித்​துள்​ளது. இதற்கு முன் 2023, டிசம்​பர் 4, 5-ல் வெப்​பநிலை 5.6 டிகிரி செல்​சி​யஸாக​வும், டிசம்​பர் 1-ம் தேதி 5.7 டிகிரி செல்​சி​யஸாக​வும் குறைந்​த​போது, தலைநகரில் இதே​போன்ற குளிர் காணப்​பட்​டது.

கடும் குளிர் காரண​மாக தலைநகரில் மின்​சார நுகர்வு அதி​கரித்​துள்​ளது. மக்​கள் குளிரைத் தவிர்க்க ஹீட்​டர்​கள் மற்​றும் பிற மின் சாதனங்​களை அதிக அளவில் பயன்​படுத்​துகின்​றனர். இதனால், டெல்​லி​யில் மின்​சா​ரத் தேவை 6,087 மெகா​வாட்​டாக உயர்ந்​துள்​ளது. இது குளிர்​கால மாதங்​களில் இது​வரை இல்​லாத அதி​கபட்ச அளவாகும்.

பஞ்​சாப், ஹரி​யா​னா, ராஜஸ்​தான், பிஹார் மற்​றும் ம.பி.​யின் சில பகு​தி​களில் மக்​கள் குளிரில் நடுங்​கிக் கொண்​டுள்​ளனர். இமாச்சல பிரதேசம் மற்​றும் உத்​த​ராகண்​டிலும் கடுமை​யான குளிர் நில​வு​கிறது. சில இடங்​களில் உறைபனி​யும் காணப்​படு​கிறது. உறைபனி​யுடன் கூடிய கடும் குளிர் காரண​மாக வட மாநிலங்​களின் வி​மானங்​கள் மற்​றும் ரயில் சேவை​களில்​ தொடர்ந்​து தாமதம்​ ஏற்​பட்​டு வரு​கிறது.

SCROLL FOR NEXT