மால்டா: “அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிம்மதியாக வாழ விரும்பினால், வரவிருக்கும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவைத் தடுக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும்” என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது. மால்டாவின் மாணிக்சக் பகுதியில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, “அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீங்கள் நிம்மதியாக வாழ விரும்பினால், பாஜகவைத் தடுக்க நீங்கள் ஒன்றிணைய வேண்டும்.
பாஜக இந்த மாநிலத்தையே சீரழித்துவிடும். அவர்கள் எந்த மதத்தையும் மதிப்பதில்லை. அவர்களே உருவாக்கிக்கொண்ட ஒரு மதத்தை மற்றவர்கள் மீது திணிக்கிறார்கள். அன்னை காளிக்குச் படைக்கப்படும் பிரசாதத்தில் மீனும், இறைச்சியும் இடம்பெறுகின்றன. அப்படியிருக்க, பாஜக எந்த மதத்தைப் போதிக்க முயற்சிக்கிறது? அவர்கள் முதலில் மேற்கு வங்கத்தின் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
எந்தவிதமான தூண்டுதல்களுக்கும் நீங்கள் பலியாகிவிடாதீர்கள். அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தி, ஒவ்வொரு பகுதியிலிருந்தும் 30 முதல் 40 பேரை கைது செய்ய விரும்புகிறார்கள். மால்டா பகுதியில் இதுதான் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. நிரபராதிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
என்ஐஏ, சிபிஐ, அமலாக்கத் துறை, பிஎஸ்எஃப் மற்றும் சிஐஎஸ்எஃப் ஆகிய மத்திய ஏஜென்சிகள் அனைத்தும் அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவர் எங்களை 'திருடர்கள்' என்று அழைக்கிறார்.
ஆனால், எல்லைப் பகுதிகளிலிருந்து வரும் பணம் எங்கே செல்கிறது? வங்க மொழியில் பேசுபவர்களை நீங்கள் 'ஊடுருவல்காரர்கள்' என்று முத்திரை குத்துகிறீர்கள். உண்மையில், மிகப் பெரிய ஊடுருவல்காரர்கள் நீங்கள்தான். தேர்தலின்போது வாக்குகளை வலுக்கட்டாயமாகப் பறிப்பதற்காகவே அவர்கள் இங்கு வருகிறார்கள்.
மால்டா மாவட்டத்தில், மக்களவைத் தொகுதிகளில் பாஜகவும் காங்கிரஸும் தலா ஒரு இடத்தைப் பிடித்துள்ளன. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே ஒருவிதமான புரிதல் நிலவுகிறது. திரிணமூல் காங்கிரஸைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் நீங்கள் ஒரு வாக்கு கூட அளிக்கக் கூடாது. அவ்வாறு அளித்தால், என்ஆர்சி அமல்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து தடுப்பு முகாம்களும் உருவாக்கப்படும். ஒரு நபர் கூட தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுவதை திரிணமூல் அரசு அனுமதிக்காது.
நீங்கள் மீன், இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றை உண்ணக்கூடாது என்று அவர்கள் கூறுகிறார்கள். அப்படியானால் ஏழை மக்கள் எதை உண்பார்கள், அமித் ஷா?
பாஜக ஆளும் மாநிலங்களில், வங்க மொழியில் பேசியதற்காகவே மக்கள் கும்பல் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். முந்தைய தினம், ராஜஸ்தானில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு புலம்பெயர் தொழிலாளி கொடூரமாகக் கொல்லப்பட்டார். புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தத் திரும்பி வர முடியாதவாறு தடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ரயில் டிக்கெட்டுகள் விற்கப்படுவதில்லை. உத்தரப் பிரதேசத்தில் அவர்களின் பேருந்துகள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இருப்பினும், நீங்கள் கண்டிப்பாகத் திரும்பி வர வேண்டும். உங்கள் உரிமைகளை யாரும் பறித்துச் செல்ல அனுமதிக்காதீர்கள்.
அமித் ஷா மேற்கு வங்கத்தை விற்க விரும்புகிறார். மேற்கு வங்க மக்களின் வாக்குரிமைகளைப் பறிக்க அவர் விரும்புகிறார். நிர்வாக அதிகாரிகளுக்கு இடையே பிளவை உருவாக்க அவர் விரும்புகிறார். அவர் மக்களைத் துன்புறுத்த விரும்புகிறார். கலவரங்களைத் தூண்டிவிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டார்கள். நாம் அவர்களுக்கு எதிராக ஜனநாயக ரீதியாகப் பழிதீர்க்க வேண்டும். அவர்கள் பொய்களை மட்டுமே பரப்புகிறார்கள். மக்களின் உயிரைத் தவிர, மற்ற எல்லாவற்றின் விலையும் உயர்ந்துவிட்டது.
அவர்கள் மக்களைத் தொலைபேசியில் அழைத்து, அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ மூலம் மிரட்டுகிறார்கள். எங்கள் வேட்பாளர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்புகிறது. பாஜகவுக்கு போதுமான இடங்கள் கிடைக்கவில்லை என்றால், வெற்றி பெறும் எங்கள் வேட்பாளர்கள் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று சில நேரங்களில் அவர்கள் ஆசை வார்த்தைகளைக் கூறி வலை விரிக்கிறார்கள்” என்றார்.