புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது.
இது தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசியதாவது: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் நமது ராணுவம் என்ன சாதித்துள்ளது என்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. நமது ராணுவ வலிமை முன்னெப்போதையும் விட பன் மடங்கு வலுப் பெற்றுள்ளது.
இந்தியா உலகிலுள்ள எந்த நாட்டையும் தாமாக முன்வந்து தாக்கியதே இல்லை. ஆனால், அண்டை நாடு ஏதேனும் ஒன்று வம்பு செய்ய முயன்றால், அதன் பிறகு விளைவு கடுமையாக இருக்கும். மற்ற அண்டை நாடுகள் நமது நாட்டுடன் நட்புடன் உள்ளன. நமக்கு ஒரே ஒரு அண்டை நாடு மட்டுமே தொல்லை கொடுத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தொல்லை கொடுத்து வரும் அண்டை நாடு பாகிஸ்தான் என்பதை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சூசகமாக இங்கு குறிப்பிட்டார். சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிப் பேசும்போது, "இந்தியா மீண்டும் வாலாட்டினால் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். எந்த செயலுக்கும் வலுவான பதிலடி கிடைக்கும். எங்களைச் சீண்டினால் கொல்கத் தாவைக் குறிவைப்போம்" என்று பேசியிருந்தார். அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வாறு சூசகமாகப் பேசியுள்ளார்.