புதுடெல்லி: காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் செயல்படாதது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் ஆஜரானார்.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணியிடம், "இந்த விவகாரத்தில் மாநிலங்கள், யூனியன் பிரதேச பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசிப்பதற்கு மத்திய உள்துறை உதவிச்செயலரை அனுப்புவது நல்லதா" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் கேரள மாதிரியை ஏன் அனைத்து மாநிலங்களும் பின்பற்றக்கூடாது என்றும் கேள்வி கேட்டனர். இதற்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கட்ரமணி, "மத்திய உள்துறை செயலர் தலைமையில் ஒரு வாரத்துக்குள் மீண்டும் சிறப்பு கூட்டம் நடத்தப்படும்" என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், "சிசிடிவி கேமராக்களை காவல் நிலையங்களில் பொருத்தும் விவகாரத்தில் உள்ள பிரச்சினைகள் 2 வாரத்துக்குள் களையப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது" என்றனர்.