ராகுல் காந்தி
புது டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "2024ல் நீட் வினாத்தாள் கசிந்தது, தேர்வு ரத்து செய்யப்படவில்லை, கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யவில்லை. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, ஒரு குழு அமைக்கப்பட்டது.
2026ல் நீட் வினாத்தாள் கசிந்தது, தேர்வு ரத்து செய்யப்பட்டது, கல்வி அமைச்சர் இன்னும் ராஜினாமா செய்யவில்லை. சிபிஐ மீண்டும் விசாரித்து வருகிறது. மற்றொரு குழு அமைக்கப்படும்.
பிரதமர் மோடியிடம் நாடு சில கேள்விகளைக் கேட்கிறது, அவற்றுக்குப் பதிலளியுங்கள். ஏன் மீண்டும் மீண்டும் வினாத்தாள் கசிவுகள் நடக்கின்றன?. இந்த 'தேர்வு வினாத்தாள் கசிவு விவாதம்' குறித்து ஏன் மீண்டும் மீண்டும் மவுனம் காக்கிறீர்கள்?. மீண்டும் மீண்டும் தோல்வியடையும் கல்வி அமைச்சரை ஏன் பதவி நீக்கம் செய்யவில்லை?” என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டினால் இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட மனிஷா குருநாத் மந்தாரேவை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய சிபிஐ, மேலதிக விசாரணைக்காக 14 நாட்கள் காவலில் வைக்கக் கோரியது. மனிஷா குருநாத் மந்தாரே தேசிய தேர்வு முகமையின் குழுவின் உறுப்பினராகவும், தேர்வு செயல்முறை நிபுணராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர்.
நீட் மறுதேர்வு ஜூன் 21 அன்று நடைபெற உள்ளது. மேலும், அடுத்த ஆண்டு முதல் நீட்-யுஜி தேர்வு கணினி முறையில் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.