

மங்களகிரி: தனது அரசியல் பயணத்தை தமிழக முதல்வர் விஜய்யின் அரசியல் எழுச்சியோடு ஒப்பிடுவது குறித்து ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜன சேனா கட்சி தொண்டர்கள் மத்தியில் இது தொடர்பாக அவர் பேசுகையில், “தமிழகத்தின் முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் நாம் ஏன் ஆந்திராவில் கூட்டணி அமைத்தோம் என்ற கேள்வியை நம் ஆதரவாளர்கள் எழுப்பி வருகின்றனர். ஆனால், ஆந்திராவுடன் ஒப்பிடும்போது தமிழகத்தின் அரசியல் சூழல் என்பது வேறுபட்டு உள்ளது.
சமூக மாற்றம் வேண்டுமென்ற நோக்கத்துடன் அரசியல் கட்சியை நான் தொடங்கினேன். முன்னாள் முதல்வர் என்டிஆரின் அரசியல் பயணத்தை பார்த்துள்ளேன். அதேநேரத்தில் நக்சலிச கொள்கைக்காக இளைஞர்கள் உயிர் தியாகம் செய்ததையும் பார்த்துள்ளேன். அந்த அனுபவங்கள் என்னை ஆழமாக சிந்திக்க செய்தது. அதனால் எனக்கு பொது வாழ்வில் பதவி மற்றும் அதிகாரத்தை காட்டிலும் சித்தாந்தம், கொள்கை மிகவும் முக்கியம் எனக் கருதுகிறேன். அந்த எண்ணத்துடன் தான் இந்த கட்சியை வழிநடத்துகிறேன்.
தேர்தலில் நாம் தனித்து போட்டியிட்டு இருக்க வேண்டும் என்றும், தெலுங்கு தேசம் கட்சி உடன் கூட்டணி வைத்திருக்க கூடாது என்றும் இப்போது நீங்கள் எல்லோரும் கருதலாம். அப்படி நம் கட்சியின் தொண்டர்கள் சொல்வது எனது காதிலும் படுகிறது. நாம் தனித்து போட்டியிட்டு இருக்கலாம்.
மசூலிப்பட்டினம் கூட்டத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் திரண்டார்கள். ஆனால், ஆந்திரா இப்போது எதிர்கொண்டுள்ள சூழல் என்பது மிகவும் இக்கட்டான காலகட்டம். சந்திரபாபு நாயுடு மாதிரியான ஒரு தலைவர் சிறையில் அடைக்கப்பட்டார். அத்தகைய சூழலில் தான் நாம் ஆதரவை தெரிவித்தோம். இது நம் மாநிலத்தின் எதிர்காலம் சார்ந்த முடிவு” என்றார்.