இண்டியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) மூத்த தலைவர் சுப்ரியா சுலே ஆகியோர் பங்கேற்றனர்.படம்: பிடிஐ

 
இந்தியா

மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்: இண்டியா கூட்டணி கூட்டத்தில் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தும் பணி குளறுபடிக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று இண்டியாகூட்டணி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி, இண்டியா கூட்டணி தலைவர்களின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) மூத்த தலைவர் சுப்ரியா சுலே, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். திமுக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன. இண்டியா கூட்டணி கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, செய்தியாளர்களிடம் கூறியதாவது: மொத்தம் 23 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கருத்துகளை முன்வைத்தனர். 5 அம்சங்கள் தொடர்பாக கூட்டத்தில் ஒருமித்தகருத்து எட்டப்பட்டது.

விலைவாசி உயர்வு: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது (எஸ்ஐஆர்) வாக்கு திருட்டு நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் கடிதம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, விரைவில் தலைமை நீதிபதியிடம் கடிதம் அளிக்கப்படும். நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீடு குளறுபடியால் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.

தற்போதைய பொருளாதார சூழல், வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சினைகள், மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசிக்க மத்திய அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இண்டியா கூட்டணி கூட்டத்தை நடத்த அனைத்து கட்சிகளும் ஒப்புக் கொண்டு உள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இண்டியா கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி), மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கேரள காங்கிரஸ், கேரள காங்கிரஸ் (எம்), ராஷ்டிரிய லோக் தந்த்ரிக் கட்சி, பாரத் ஆதிவாசி கட்சி, லோக் தளம், அகில இந்திய பார்வர்டு பிளாக், சேக்தாரி காம்கர் பக்சா உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறும்போது, “நாங்கள் இண்டியா கூட்டணியில் இல்லை’’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT