புதுடெல்லி: குஜராத் முதல்வர், பிரதமர் என கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து பொதுச் சேவை செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நேற்று கூடியது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: கடந்த 25 ஆண்டுகளாக குஜராத்தின் முதல்வராகவும், பிரதமராகவும் மோடி ஆற்றிய சாதனைகளை மத்திய அமைச்சரவை பாராட்டி தீர்மானம் இயற்றியுள்ளது. ‘தேசத்துக்கு முன்னுரிமை.. குடிமக்களுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையால் வழிநடத்தப்பட்ட பிரதமர் மோடியின் அசாதாரண பயணத்தைக் கொண்டாடுகிறது.
குஜராத்தில் 3 முறை பெற்ற மகத்தான வெற்றிகளும், அடுத்தடுத்து நடந்த மூன்று மக்களவைத் தேர்தல்களில் கிடைத்த ஆதரவும், பிரதமர் மோடி மீது மக்கள் வைத்துள்ள நீடித்த நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன.
நாட்டின் மீதான வளர்ச்சிப் பார்வை, 25 கோடி மக்களை வறுமைக் கோட்டிலிருந்து அகற்றியது, சமூகத்துக்கு அதிகாரமளித்தல், தற்சார்பு இந்தியாவுக்கான அடித்தளங்களை உருவாக்குதல், குடிமக்களுக்கு சேவை செய்ய உயரிய தொழில்நுட்பம், பதற்றமான காலங்களில் உறுதியான தலைமை, நக்சல்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகள், உலக அரங்கில் இந்தியாவின் குரலை வலுப்பெறச் செய்தது, 2047-ம் ஆண்டுக்குள் வளமான, தன்னிறைவு பெற்ற மற்றும் வளர்ந்த இந்தியாவை நோக்கிய கூட்டு முயற்சி என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை ஆகிய 10 அம்சங்களைப் பாராட்டி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரூ.10,000 கோடி எஸ்எம்இ வளர்ச்சி நிதி
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எஸ்எம்இ) நீண்டகால பங்கு மூலதனத்தை வழங்குவதையும், உலக அளவில் போட்டியிடக்கூடிய புதிய தலைமுறை இந்திய நிறுவனங்களை உருவாக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டு, எஸ்எம்இ வளர்ச்சி நிதியை அமைக்க ரூ.10,000 கோடி வழங்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த நிதியானது, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் நேரடிப் பங்கு முதலீடுகளை மேற்கொள்ளும் என்று தெரியவந்துள்ளது.