இந்தியா

மிதக்கும் சூரிய மின் நிலையங்கள் அமைக்க ரூ.5,070 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: எண்ணெய் மற்றும் இயற்கை வளங்களை கண்டறிய ரூ.84,084 கோடி சமுத்திர மந்தன் மற்றும் நாடு முழுவதும் ரூ.5,070 கோடியில் மிதக்கும் சூரிய மின் நிலையங்கள் அமைக்கும் புதிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மூத்த மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக நாடு முழுவதும் ரூ.5,070 கோடி முதலீட்டில் மிதக்கும் சூரிய மின் நிலையங்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஒவ்வொரு சூரிய மின் நிலையத்திலும் குறைந்தபட்சம் 2 மணி நேர சேமிப்பு வசதி ஏற்படுத்தப்படும்.

சமுத்திர மந்தன்

நாடு முழுவதும் எண்ணெய் வளம், இயற்கை எரிவாயு வளங்களை கண்டறிய ரூ.84,084 கோடி மதிப்பிலான சமுத்திர மந்தன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.

இதன்படி எண்ணெய் வளத்தை கண்டறிய ஒவ்வொரு அகழ்வாய்வு திட்டத்துக்கும் மத்திய அரசு சார்பில் ரூ.650 கோடி நிதியுதவி வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் கடல்சார் அகழ்வாய்வு மூலம் புதிய எண்ணெய் வயல்கள், இயற்கை எரிவாயு வயல்கள் கண்டறியப்படும்.

சமுத்திர மந்தன் திட்டத்தில் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக மட்டும் ரூ.10,000 கோடியும், கடல்சார் ஆய்வுகளுக்காக ரூ.28,534 கோடியும் செலவிடப்படும். புதிதாக எண்ணெய் வளம் கண்டறியப்பட்ட பகுதிகளில் ரூ.2,000 கோடியில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படும்.

விவசாயிகளுக்கான நிதியுதவி

பிஎம் கிசான் திட்டத்தின்படி குறு, சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை 2030-31-ம் நிதியாண்டு வரை நீட்டிக்க மத்திய அவைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. இதற்கு ரூ.3.15 லட்சம் கோடி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

இதுவரை 23 தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.4.47 லட்சம் கோடி செலுத்தப்பட்டு உள்ளது.

ரூ.36,441 கோடி

விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க கேலோ இந்தியா திட்டம், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்காக ரூ.36,441 கோடி நிதியுதவி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. வரும் 2030-31-ம் ஆண்டு வரை நிதியுதவி வழங்கப்படும். இதன்மூலம் நாடு முழுவதும் விளையாட்டு துறை சார்ந்த கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். வரும் 2036-ம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஏதுவாக புதிய திட்டங்கள் அமல் செய்யப்பட உள்ளன.

SCROLL FOR NEXT