புதுடெல்லி: தீபாவளிப் பண்டிகைக்காக ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
தீபாவளி, தசரா, துர்கா பூஜை பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் போனஸ் வழங்கப்படும்.
இந்நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி சுமார் 11.40 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அளிக்க ரூ.2,009 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ரூ.17,951 போனஸ்
இதன்மூலம் தகுதியுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கு நிகரான ஊதியத்தை போனஸாக வழங்கப்படும். அதிகபட்சமாக ஓர் ஊழியர் ரூ.17,591 வரை பெறக்கூடும்.
இந்த தீபாவளி போனஸ் ரயில்வேயில் பணியாற்றும் தண்டவாளப் பராமரிப்பாளர்கள், ஓட்டுநர்கள், கார்டுகள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள், ரயில்வே அமைச்சக ஊழியர்கள் மற்றும் இதர சி பிரிவு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்.
வழக்கம்போல் துர்கா பூஜை, தசரா பண்டிகை விடுமுறைக்கு முன்னதாக இந்த போனஸ் வரவு வைக்கப்படும் எனத் தெரிகிறது.
ரயில்வே ஊழியர்களை ஊக்கப்படுத்தி இன்னும் சிறப்பாக செயல்படவைக்கும் நோக்கத்தில் இந்த போனஸ் வழங்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், 2025- 2026-ம் ஆண்டில் ரயில்வே 1670 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளதோடு, 740 கோடி பயணிகளையும் கையாண்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.