புதுடெல்லி: இந்தியாவின் மிக முக்கிய வரலாற்று மற்றும் இலக்கியப் படைப்புகளான மகாபாரதம், கவுடில்யரின் அர்த்தசாஸ்திரம் மற்றும் கல்ஹணரின் ராஜதரங்கிணி ஆகிய மூன்று காவியங்களும், யுனெஸ்கோவின் ‘உலகின் நினைவகம்’ அமைப்பின் ஆசிய-பசிபிக் பிராந்தியப் பதிவேட்டில் அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் அறிவுசார் மற்றும் வரலாற்று ஆவணப் பாரம்பரியத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள இந்த மகத்தான அங்கீகாரத்துக்கு மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
1. ராஜதரங்கிணி
12-ம் நூற்றாண்டில் காஷ்மீரைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் கல்ஹணரால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட நூல். காஷ்மீரின் அரச வம்சங்கள், அரசியல் மாற்றங்கள் மற்றும் சமூக வரலாற்றைக் காலவரிசைப்படி துல்லியமாக ஆவணப்படுத்திய வரலாற்றுப் பதிவாக இது போற்றப்படுகிறது.
2. மகாபாரதம்
உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்று. கவுரவர்-் பாண்டவர் இடையிலான போரைத் தாண்டி தர்மம், நீதி, ஒழுக்கம், ஆட்சிமுறை மற்றும் மனிதக் கடமைகளைப் பற்றி பேசுகிறது. இதில் இடம்பெற்றுள்ள பகவத் கீதை, உலகளாவிய தத்துவச் சிந்தனைகளுக்கு இன்றும் வழிகாட்டி.
3. அர்த்தசாஸ்திரம்
சாணக்கியர் என்றழைக்கப்படும் கவுடில்யரால் இயற்றப்பட்ட இந்நூல், பண்டைய இந்தியாவின் ஆட்சி நிர்வாகம், பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை, வரிவிதிப்பு, ராணுவ உத்திகள் குறித்த விரிவான வழிகாட்டி.
ஆவணப் பாரம்பரியங்கள் அழிந்துபோகாமல் பாதுகாக்கவும், வருங்காலத் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கவும் 1992-ம் ஆண்டு ‘உலகின் நினைவகம்’ என்ற திட்டத்தை யுனெஸ்கோ தொடங்கியது. இந்தியாவில் இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை இந்திராகாந்தி தேசிய கலைமையம் மேற்கொண்டு வருகிறது.
ஏற்கெனவே ரிக் வேதம், சைவ ஆகம கையெழுத்துப் பிரதிகள், தமிழ் மருத்துவ நூல்கள், காலசக்கர தந்திர உரைகள், அபிநவகுப்தரின் படைப்பு ஆகியவை யுனெஸ்கோவின் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளன. 2023-ல் பஞ்சதந்திர கையெழுத்துப் பிரதியும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டது்.