ஏக்நாத் ஷிண்டே
மும்பை: உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்த 6 எம்பிக்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் நேற்று இணைந்தனர்.
கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றிருந்த உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 தொகுதிகளைக் கைப்பற்றியது. இந்த சூழலில் கடந்த 18ம் தேதி மும்பையில் உத்தவ் அணி சிவசேனா எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 3 எம்பிக்கள் மட்டுமே பங்கேற்றனர். 6 எம்.பிக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்த சூழலில் உத்தவ் சிவசேனாவை சேர்ந்த 6 எம்பிக்கள் மும்பையில் நேற்று ஷிண்டேவின் சிவசேனாவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசும்போது, "சிவசேனாவை காப்பாற்ற கடந்த 2022ம் ஆண்டில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. தற்போது சிவசேனாவின் கொள்கைகளை காப்பாற்ற புதிதாக 6 எம்பிக்கள் எங்கள் அணியில் இணைந்துள்ளனர். சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் கொள்கை, கோட்பாடுகளை நாங்களே காப்பாற்றி வருகிறோம். இதன் காரணமாகவே எங்கள் அணிக்கு ஆதரவு பெருகி வருகிறது" என்றார்.
ஷிண்டே சிவசேனாவில் ஏற்கெனவே 7 எம்பிக்கள் உள்ளனர். புதிதாக 6 எம்பிக்கள் இணைந்திருப்பதால் அந்த கட்சியின் மக்களவை பலம் 13 ஆக அதிகரித்துள்ளது. மூன்றில் இரு பங்கு எம்பிக்கள் அணி மாறியிருப்பதால் கட்சி தாவல் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.
இது குறித்து முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறும்போது, "சுமார் 30 ஆண்டுகளாக காங்கிரஸுக்கு எதிராக சிவசேனா போராடியது. ஆனால் சிவசேனாவை, அந்த கட்சி உடைக்கவில்லை. பாஜக வளர்ச்சி அடைய சிவசேனா உறுதுணையாக இருந்தது. ஆனால் எங்கள் கட்சியை பாஜக உடைத்து விட்டது" என்றார்.