பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா
சண்டிகர்: பஞ்சாபில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 மற்றும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் புதிய திட்டத்தை ஆம் ஆத்மி அரசு நேற்று அறிவித்தது.
கடந்த 2022-ல் நடைபெற்ற பஞ்சாப் தேர்தலின் போது, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்தது. தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி சார்பில் பகவந்த் மான் முதல்வரானார். 4 ஆண்டுகளாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், மகளிர் தினமான நேற்று பஞ்சாப் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா 2026- 27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது 'முதலமைச்சர் மாவன் தியான் சத்கார் யோஜனா' என்ற திட்டத்தை அறிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,000, பட்டியலின பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என அவர் அறிவித்தார். இந்தப் பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அமைச்சர் சீமா கூறும்போது, ”18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். தற்போதுள்ள அல்லது முன்னாள் நிரந்தர அரசு ஊழியர்கள், எம்.பி./ எம்எல்ஏ.க்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் ஆகிய ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் இதில் பயன்பெறலாம்.
மேலும், முதியோர் ஓய்வூதியம், கணவனை இழந்தவர்கள், ஆதரவற்றோர் ஓய்வூதியம் அல்லது மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் போன்ற ஏற்கெனவே உள்ள சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயனடைந்து வரும் பெண்களும் இத்திட்டத்துக்குத் தகுதியுடையவர்கள்” என்றார்.