பெங்களூரு: ஒடிசாவில் 4 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக தரப்பில் 3 பேர், பிஜு ஜனதா தளம் சார்பில் 2 பேர் என மொத்தம் 5 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஒரு வேட்பாளர் வெற்றி பெற 30 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. பாஜகவுக்கு 79 எம்எல்ஏக்களும், 3 சுயேச்சைகளின் ஆதரவும் உள்ளது. இதன் மூலம் 2 எம்பிக்களை பாஜகவால் தேர்வு செய்ய முடியும். அந்த கட்சியிடம் மீதம் 22 எம்எல்ஏக்களின் வாக்குகள் மட்டுமே உள்ளன.
பிஜு ஜனதா தளம் கட்சியில் (பிஜேடி) 48 எம்எல்ஏக்கள் உள்ளனர். 14 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ், பிஜேடி-க்கு ஆதரவு அளித்துள்ளது. இதன்படி பிஜு ஜனதா தளத்தால் 2 எம்பிக்களை தேர்வு செய்ய முடியும்.
இந்த சூழலில் குதிரை பேரம் அச்சத்தால் காங்கிரஸின் 8 எம்எல்ஏக்கள், கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு 2 பேர் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதன்பேரில் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கூறும்போது, “காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.5 கோடி வழங்க 2 பேர் பேரம் பேசி உள்ளனர். ஆனால் எங்கள் எம்எல்ஏக்கள் மறுத்துவிட்டனர்” என்றார்.