

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தாரை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே நேற்று 16-வது நாளாக போர் நீடித்தது. ஈரானின் பார்சு மாகாண தலைநகர் சிராசுவில் அந்த நாட்டின் ராணுவ தளம் உள்ளது. அங்கு ஏவுகணைகள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைத் தொடர்ந்து சிராசுவில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தின.
இதில் ஈரான் ராணுவ தளங்கள் கடுமையாக சேதமடைந்தன. இதேபோல ஈரானின் இஸ்பகானில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்தும் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் வான் வழி தாக்குதலை நடத்தின. ஈரான் முழுவதும் இதுவரை 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபி, துபாய் பகுதிகளில் அமெரிக்க விமானப் படைத் தளங்கள் செயல்படுகின்றன. இந்த தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசியது. மேலும் துபாய் மெரினா கடற்கரை, அல் சூபவ் பகுதிகளில் ஈரான் ஏவுகணைகள் விழுந்து வெடித்துச் சிதறின.
ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜாயிரா துறைமுகத்தின் மீது ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் துறைமுகத்தை ஒட்டியுள்ள எண்ணெய் கிடங்குகள் தீப்பிடித்து எரிகின்றன. அங்கு 2-வது நாளாக நேற்றும் எண்ணெய் கிடங்குகள் கொழுந்துவிட்டு எரிந்தன. தீயை அணைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக ஐக்கிய அரபு அமீரக வட்டாரங்கள் கூறும்போது, “எங்கள் நாட்டை குறிவைத்து ஈரான் ராணுவம் இதுவரை 1,800 ஏவுகணைகளை வீசியிருக்கிறது. 1,600 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியிருக்கிறது. பெரும்பாலான ஏவுகணைகள், ட்ரோன்களை நடுவானில் இடைமறித்து அழித்துவிட்டோம்’’ என்று தெரிவித்தன.
குவைத்தில் அமெரிக்க விமானப் படைத் தளம் செயல்படுகிறது. அந்த படைத்தளத்தை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று 2 ஏவுகணைகளை வீசியது. மேலும் குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் ராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் விமான நிலையத்தின் ரேடார் கட்டமைப்பு சேதமடைந்தது. சவுதி அரேபியாவின் அல் கார்ஜ் நகரில் அமெரிக்க விமானப் படைத்தளம் செயல்படுகிறது. அந்த தளத்தை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று 6 ஏவுகணைகளை வீசியது. மேலும் 2 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. ஈரானின் ஏவுகணைகள், ட்ரோன்கள் நடுவானில் அழிக்கப்பட்டன.
கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளம், பஹ்ரைன் நாட்டின் ஷேக் இசாவில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளம், அந்த நாட்டின் மனாமாவில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசியது. அவை நடுவானில் அழிக்கப்பட்டன. இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்தும் ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
இது தொடர்பாக ஈரான் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “இஸ்ரேலின் செயற்கைக் கோள் கட்டுப்பாட்டு மையங்கள், காவல் தலைமை அலுவலங்கள் மீது ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று தெரிவித்தன. இஸ்ரேல் சுகாதாரத்துறை நேற்று கூறும்போது, “ஈரான் தாக்குதலால் கடந்த 24 மணி நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 3,195 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தாக்குதலில் தப்பிய இந்திய கப்பல்: ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜாயிரா துறைமுகத்தின் மீது ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. அப்போது அந்த துறைமுகத்தில் இந்திய சரக்கு கப்பலான ஜக் லட்கியில் கச்சா எண்ணெய் ஏற்றப்பட்டு கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக இந்திய சரக்கு கப்பலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த கப்பல் புஜாயிரா துறைமுகத்தில் இருந்து பாதுகாப்பாக புறப்பட்டது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.