இம்பால்: மணிப்பூரில் 2 குழந்தைகள் மரணம் தொடர்பாக நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்த சிஆர்பிஎப் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.
மணிப்பூரின் விஷ்ணுபூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் ஒரு வீட்டின் மீது ஏவுகணை விழுந்து வெடித்ததில், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுவனும் அவனது 6 மாத தங்கையும் உயிரிழந்தனர். மைதேயி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பள்ளத்தாக்கு மற்றும் குகி-ஸோமி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் மலைப் பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ள துரோங்லோபி அவாங் லெய்காய் என்ற கிராமத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
தாக்குதலில் குழந்தைகளின் தாய் ஓயினம் பினிதா பலத்த காயமடைந்து, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் காரணமாக மணிப்பூரில் மீண்டும் போராட்டம் வெடித்தது. விஷ்ணுபூர் மாவட்டத்தில் சிஆர்பிஎப் முகாம் ஒன்றை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அவர்களை விரட்டியடிக்க சிஆர்பிஎப் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.
2 எண்ணெய் டேங்கர் லாரிகளுக்கும் போராட்டக்கார்கள் தீவைத்தனர். இந்நிலையில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் நோக்கில், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தவு பால், கக்சிங், விஷ்ணுபூர் ஆகிய 5 பள்ளத்தாக்கு மாவட்டங்களில் இணைய சேவையை 3 நாட்களுக்கு மாநில அரசு முடக்கி வைத்துள்ளது.
இதற்கிடையில் 2 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான தாக்குதலுக்கு மணிப்பூர் உள்துறை அமைச்சர் கே.கோவிந்தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அவர், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.