போபால்: நடிகை ட்விஷாவிடம் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பு பங்குகளை தனது பெயருக்கு மாற்ற மாமியார் கிரிபாலா சிங் வற்புறுத்தி இருப்பது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.
உத்தர பிரதேசம், நொய்டாவை சேர்ந்தவர் ட்விஷா சர்மா. கடந்த 2012-ல் ‘‘மிஸ் புனே’’ பட்டம் வென்ற அவர் சில தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தார். பல நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாக பணியாற்றினார். திரையுலகில் தொடர்ந்து முன்னேற முடியாத நிலையில் மும்பை, டெல்லியில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் மார்க்கெட்டிங் மேலாளராகப் பணியாற்றினார்.
கடந்த 2024-ல் ம.பி. தலைநகர் போபாலைச் சேர்ந்த வழக்கறிஞர் சமர்த் சிங்குடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. 2025-ம் ஆண்டு இறுதியில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் ட்விஷா சர்மா, சமர்த் சிங் திருமணம் நடைபெற்றது. ட்விஷாவின் மாமியார் கிரிபாலா சிங் ஓய்வு பெற்ற நீதிபதி ஆவார். திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து அவர் சில லட்சங்களை வரதட்சணையாகப் பெற்றார். சில மாதங்களுக்கு முன்பு ட்விஷா கர்ப்பமானார். ஆனால் அவரது நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் சமர்த் சிங்கும், மாமியார் கிரிபாலா சிங்கும் கருவை கலைக்க வற்புறுத்தினர்.
அவர்களின் ஏற்பாட்டின்பேரில் ட்விஷாவுக்கு வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு நடைபெற்றது. இந்த சூழலில் கடந்த 12-ம் தேதி போபாலில் உள்ள கணவர் வீட்டில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். போதை பழக்கம் மற்றும் மனநல பாதிப்பு காரணமாக ட்விஷா தற்கொலை செய்து கொண்டதாக கணவர் வீட்டார் வாதிட்டனர். ஆனால் அவரது மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். ட்விஷா குடும்பத்தினரின் போராட்டத்தால் வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
சிபிஐ விசாரணையில் கணவர் வீட்டாரின் பல்வேறு வரதட்சணை கொடுமைகள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன. இதன்காரணமாக நேற்று முன்தினம் மாமியார் கிரிபாலா சிங் கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே கைது செய்யப்பட்ட கணவர் சமர்த் சிங் சிறையில் உள்ளார். இருவரும் போபாலில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் 5 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த வழக்கு குறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: திருமணத்தின்போதே ட்விஷாவின் குடும்பத்தினரிடம் இருந்து கணவர் வீட்டார் சில லட்சங்களை வரதட்சிணையாக பெற்று உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு ட்விஷாவின் பெயரில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள பங்குகளை தங்களது பெயர்களுக்கு மாற்ற கணவர் சமர்த் சிங்கும் மாமியார் கிரிபாலாவும் தொடர்ந்து வற்புறுத்தி வந்து உள்ளனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் நடத்திய 2-வது பிரேதபரிசோதனையில் ட்விஷாவின் உடலில் 6 இடங்களில் காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவரது தலை, வலது கை, விரல்களில் காயங்கள் இருந்தன. இவை அவரது மரணத்துக்கு முன்பாக ஏற்பட்ட காயங்கள் என்று பிரேத பரிசோதனை நடத்திய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் முதலாவது பிரேத பரிசோதனை நடந்தபோது கிரிபாலா சிங்கின் நெருங்கிய உறவினர்களான 2 மூத்த மருத்துவர்கள் உடன் இருந்துள்ளனர்.
இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. சிசிடிவி கேமரா உட்பட பல்வேறு முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. ஓய்வு பெற்ற நீதிபதியான கிரிபாலா சிங் பல்வேறு இடங்களில் தனது செல்வாக்கை பயன்படுத்தி உள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இந்த வழக்கில் மறைந்துள்ள உண்மைகள் விரைவில் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.