டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி ஆகிய 4 புனிதத் தலங்கள் ‘சார்தாம்’ என்று அழைக்கப்படுகின்றன.
இந்நிலையில் கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய தலங்களுக்கு விரைவாக சென்று வருவதற்கு வசதியாக 125 கிலோமீட்டர் நீளத்துக்கு ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் இடையே ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை மத்திய ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள மலையைக் குடைந்து சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி, சுமேர்பூர் பகுதியில் 4.7 கி.மீ. தூரமும், மரோரா பகுதியில் 1.79 கிலோ மீட்டர் தூரமும் ஆக மொத்தம் 6.59 கிலோமீட்டர் தூரத்துக்கு மலையைக் குடைந்து சுரங்கப்பாதை வெற்றிகரமாக அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சுரங்கம்-1-ல் 110 மீட்டர் தூரத்துக்கு மலையைக் குடைய வேண்டிய பணி இன்னும் நடைபெறாமல் உள்ளது. அங்கு மண், பாறைகள் சரியும் நிலை உள்ளதால் அப்பகுதியில் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மண் சரியாதபடி சுரங்கத்தைக் குடைவதற்குத் தேவையான சிறப்பு தொழில்நுட்பம் போன்றவற்றை அமல்படுத்த ரயில்வே அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த ரயில்வே திட்டம் தொடங்கும்போது கேதார்நாத், பத்ரிநாத் செல்லும் பக்தர்கள் விரைவில் புனிதத் தலங்களை அடைய முடியும் என்றும் விரைவில் தரிசனத்தை முடித்து விட்டு திரும்ப முடியும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.