உயிரிழந்த திரிபுரா மாநில டிஜிபி அனுராக் தன்கர்
அகர்தலா: திரிபுரா மாநில காவல் துறைத் தலைவர் (டிஜிபி) அனுராக் தன்கர் (60), தனது அலுவலகக் குளியலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திரிபுரா மாநில காவல்துறைத் தலைவர் அனுராக் தன்கர், அகர்தலாவில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் உள்ள குளியலறையில் நேற்று தூக்கில் தொங்கியபடி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 1994ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான அவர் உடனடியாக மீட்கப்பட்டு அகர்தலாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் கோவிந்த் வல்லப் பந்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து மூத்த மருத்துவர் பிரதீப் பவுமிக் கூறும்போது, “நண்பகல் 12 மணிக்கு அனுராக் தன்கர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது, அவர் உயிருடன் இருப்பதற்கான எந்தவொரு அறிகுறிகளும் இல்லை. சுமார் 48 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளித்தும் அவர் இறந்துவிட்டார். மரணத்துக்கான சரியான காரணம் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே தெரியவரும்” என்றார்.
இது குறித்து திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘டிஜிபி அனுராக் தன்கர் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
நீரவ் மோடி வழக்கை விசாரித்தவர்: மிகவும் நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த அனுராக் தன்கர் புலன் விசாரணைக்குப் பெயர் பெற்றவர். பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் சிபிஐ அதிகாரியாக பணியாற்றியபோது, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று மோசடி செய்த நீரவ் மோடி வழக்கை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனுராக் தன்கரின் திடீர் மரணம் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.