புதுடெல்லி: 200414-ல் 171 ஆக இருந்த வருடாந்தர சராசரி ரயில் விபத்துகள், 2024-25-ல் 31 ஆக குறைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த அஸ்வினி வைஷ்ணவ், ‘‘இந்திய ரயில்வேயில் பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
எந்தவொரு அசாதாரண சம்பவமும் ரயில்வே நிர்வாகத்தால் முழுமையாக விசாரிக்கப்படுகிறது. தொழில்நுட்ப காரணம் தவிர வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என சந்தேகிக்கப்படும் இடங்களில், மாநில காவல்துறையின் உதவியும் பெறப்படுகிறது.
சில சந்தர்ப்பங்களில், சிபிஐ, என்ஐஏ ஆகியவற்றின் வழிகாட்டுதலும் பெறப்படுகிறது. இருப்பினும், முதன்மை விசாரணை வழிமுறைகள் மாநில காவல்துறை மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
அரசியல் சட்ட ஏற்பாடுகளின் கீழ் குற்றச் செயல்கள், சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல் மற்றும் ரயில்வே உள்கட்டமைப்பின் பாதுகாப்பு (அதாவது தண்டவாளங்கள், பாலங்கள், சுரங்கப்பாதைகள்) போன்றவற்றில் விசாரணை செய்வது மாநில அரசின் பொறுப்பாகும்.
2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் பதிவான அனைத்து ரயில் பாதை நாசவேலை/சேத சம்பவங்களிலும், மாநில காவல்துறை/ஜிஆர்பி மற்றும் பிற சட்ட அமலாக்க நிறுவனங்களால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அடையாளம் காணப்பட்ட விபத்துப் புள்ளிகள் மற்றும் பாதிக்கப்படும் பகுதிகளில் ரயில்வே பணியாளர்கள், ஆர்.பி.எஃப், ஜி.ஆர்.பி மற்றும் சிவில் போலீசார் இணைந்து அடிக்கடி ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிக ஆபத்துள்ள பகுதிகள், பாதிக்கப்படும் பிரிவுகளில் ரோந்து செல்வதற்கும், அச்சுறுத்தல்களைக் குறைக்க உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரயில் பாதைகளுக்கு அருகில் கிடக்கும் பொருட்களை அகற்ற தொடர்ச்சியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் விளைவாக 2004-14 காலகட்டத்தில் 171 ஆக இருந்த ரயில் விபத்துகளின் ஆண்டு சராசரி, 2024-25-ல் 31 ஆக குறைந்துள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் (நவம்பர், 2025 வரை) விபத்துகள் 11 ஆக குறைந்துள்ளன’’ என தெரிவித்துள்ளார்.