லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அனிமேஷன் பயிற்சி மையம் செயல்பட்டு வந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இதில் திருமணம் நிச்சயமான தம்பதியர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட பயிற்சி மையத்தில் பணியாற்றியவர்களில் 9 பேர் உயிரிழந்தனர். இதில் நீலேஷ் குமார் மற்றும் அனாமிகா சாமந்த் ஆகியோரும் அடங்குவர். இருவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இந்நிலையில், அவர்களது திருமண வாழ்க்கை தீயில் கரைந்தது.
உயிரிழந்த நீலேஷ் மற்றும் அனாமிகா ஆகியோர் பணியிடத்தில் சந்தித்து கொண்டுள்ளனர். இருவரும் நண்பர்களாக பழகிய நிலையில் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கடந்த வாரம் அனாமிகாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மேற்குவங்க மாநிலத்தில் இருந்து லக்னோவுக்கு வந்து, நீலேஷ் குடும்பத்தினரை சந்தித்துள்ளனர். இந்நிலையில், நீலேஷ் குடும்பத்தினர் அடுத்த வாரம் மேற்கு வங்கம் செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்தச் சூழலில் இருவரும் தீ விபத்தில் உயிரிழந்தனர்.
சொந்த வீடு, பணி உயர்வு, சம்பள உயர்வு, திருமணம் உள்ளிட்டவை கைகூடி வந்த வேளையில் நீலேஷ் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இப்போது நீலேஷ், அனாமிகாவின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லக்னோ தீ விபத்து
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ளது அலிகஞ்ச் பகுதி. இங்குள்ள வணிக வளாகத்தில் விளையாட்டு மையம், செல்லப் பிராணிகளுக்குத் தேவையான பொருட்கள் விற்பனை மையம், கிளினிக் மற்றும் பல்வேறு கடைகள் உள்ளன. இதன் முதல் தளத்தில் அனிமேஷன் பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. 15 முதல் 17 வயதுக்கு உட்பட்ட பல மாணவர்கள் இங்கு பயிற்சி பெற்று வந்தனர்.
இந்நிலையில், இந்த வணிக வளாகத்தின் 3-வது தளத்தில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில், அடுத்தடுத்த தளங்களுக்கும் தீ மளமளவென பரவியது. இதில், முதல் தளத்தில் அனிமேஷன் பயிற்சி மையத்தில் இருந்த மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். நுழைவுவாயில் வழியாகவோ, முன்பகுதி வழியாகவோ அவர்களால் தப்பித்து வெளியேற முடியவில்லை.
இதனால், பயிற்சி மையத்தின் ஜன்னல்களை மாணவர்கள் உடைத்தனர். அதன் வழியாக 7 மாணவர்கள் கீழே குதித்தனர். அதில் ஒரு மாணவன் சுற்றுச்சுவரில் விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஜன்னல் வழியாக குதித்த மாணவர்களைக் காப்பாற்ற அக்கம் பக்கத்தினர் உதவினர். மாணவர்கள் முதல் மாடியில் இருந்து குதிப்பது மற்றும் ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்த காட்சிகள் வலைதளங்களில் பரவி காண்போரை பதறவைத்தது.
பயிற்சி மையத்துக்குள் மரத்தால் செய்யப்பட்ட மேஜை, நாற்காலிகள் அதிகம் இருந்ததால், தீ வேகமாகப் பரவியது. சுமார் ஒரு மணி நேரமாகப் பற்றியெரிந்த தீயை தீயணைப்பு படையினர் போராடி அணைத்தனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அனிமேஷன் மையத்தின் பக்கவாட்டு சுவரை உடைத்து மாணவர்கள் மீட்கும் முயற்சிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. தீ முழுவதுமாக அணைக்கப்பட்ட பிறகு, பயிற்சி மையத்தில் இருந்து 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.