புதுடெல்லி: போக்குவரத்து விதிமீறல்களுக்காக வழங்கப்பட்ட சலான்களின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் இருமடங்கு உயர்ந்துள்ள அதே வேளையில், செலுத்தப்படாத நிலுவைத் தொகைகளும் கணிசமாக அதிகரித்துள்ளது.
போக்குவரத்து விதிமீறல்களை மின்னணு முறையில் அமல்படுத்துவது மற்றும் செலுத்தப்படாத போக்குவரத்து ‘இ-சலான்’ அபராதங்களை வசூலிப்பது தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் விசாரித்தது.
அப்போது, ‘இ-சலான்’களை வழங்குவதை விட அவற்றின் மூலம் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வசூலிப்பதே உண்மையான சவால் என்று குறிப்பிட்ட நீதிமன்றம், போக்குவரத்து விதிகளை மீறுபர்களுக்கு ‘இ-சலான்’ மூலம் விதிக்கப்படும் அபராதங்களை மின் கட்டணத்துடன் இணைத்து வசூலிக்கலாம் என பரிந்துரை செய்தது.
இந்தப் பரிந்துரை ஒரு விவாதத்தைத் தூண்டியுள்ளதுடன், நாடு முழுவதும் அதிகரித்து வரும் தீர்க்கப்படாத போக்குவரத்து விதிமீறல்களின் எண்ணிக்கை மீது புதிய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வகையில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்காக வழங்கப்பட்ட சலான்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் இரட்டிப்பாகி உள்ளது.
அதன்படி, போக்குவரத்து சலான்களின் எண்ணிக்கை 2021-ல் 4.2 கோடியிலிருந்து 2025-ல் 9.6 கோடியாக அதிகரித்தது. 2026-ம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் இந்த எண்ணிக்கை 7.8 கோடியை எட்டியது. அபராதங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, செலுத்தப்படாத நிலுவைத் தொகைகளும் அதிகரிக்கின்றன.
செலுத்தப்படாத சலான்களின் பங்கு, கடந்த பல ஆண்டுகளாக சீராகவும் கடுமையாகவும் அதிகரித்து வந்துள்ளது. 2022-ம் ஆண்டில் வழங்கப்பட்ட மொத்த சலான்களில் கிட்டத்தட்ட 48% நிலுவையில் இருந்தன. இந்த விகிதம் 2023-ல் 55%, 2024-ல் 63%, 2025-ல் 70%, 2026-ல் 82 சதவீதமாகவும் உயர்ந்தது.
உத்தர பிரதேசம் முதலிடம்: அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் சுமார் 9 கோடி போக்குவரத்து சலான்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து தெலங்கானாவில் 8.2 கோடியும், கேரளாவில் 4.7 கோடியும், ஹரியானாவில் 2.4 கோடியும் வழங்கப்பட்டுள்ளன.