புதுடெல்லி: இந்தியா-இங்கிலாந்து இடையிலான வர்த்தக ஒப்பந்தம் (சிஇடிஏ) வரும் ஜூலை 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 99% ஏற்றுமதி பொருட்கள் மீதான சுங்க வரி நீக்கப்பட உள்ளது.
இந்தியா-இங்கிலாந்து இடையே ஒருங்கிணைந்த பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பான உடன்படிக்கை கடந்த ஆண்டு கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும் வரும் ஜூலை 15 முதல் அமலுக்கு வரும் என்றும் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரும் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதை கொண்டாடினர். அப்போது மோடி, ‘நாம் அதைச் சாதித்துவிட்டோம்' என்று தெரிவித்தார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் 99% ஏற்றுமதி பொருட்கள் மீது விதிக்கப்படும் சுங்க வரிகள் நீக்கப்பட உள்ளன. இதனால் இருநாடுகளுக்கிடையிலான வர்த்தகம் சுமார் ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் ஜவுளித் துறை, ரத்தினங்கள் மற்றும் நகைகள், மருந்துத் துறை, வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் போன்ற முக்கிய துறைகளுக்கு பெரும் நன்மைகளை வழங்கும் எனக் கருதப்படுகிறது. மேலும், இந்திய நுகர்வோர் இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் கார்கள் மற்றும் விஸ்கியை குறைந்த விலையில் பெறும் வாய்ப்பும் உருவாகலாம். அதேசமயம், சமையல் கலைஞர்கள், யோகா பயிற்சியாளர்கள் போன்ற தொழில்முறை நிபுணர்கள் எளிதான பயண வசதிகள் மற்றும் விசா சலுகைகளால் பயன்பெறலாம்.
இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளுக்கும் இடையேயான வாகன இறக்குமதி வரி குறிப்பிட்ட ஒதுக்கீடுகளின் கீழ் தற்போதுள்ள சுமார் 110-லிருந்து 10% ஆகக் குறைக்கப்படும். முதல் 15 ஆண்டுகளில் 3.78 லட்சம் யூனிட்டுகள் வரையிலான வழக்கமான இன்ஜின் கொண்ட இங்கிலாந்தின் பயணிகள் கார்களை (வெகுஜன சந்தை மாடல்கள் உட்பட) சலுகை வரியில் இறக்குமதி செய்ய இந்தியா அனுமதிக்கும்.
இதுபோல 20,000 முதல் 80,000 பவுண்டு வரையிலான விலை வரம்பில் உள்ள இந்திய மின்சார, ஹைபிரிட் மற்றும் ஹைட்ரஜன் பயணிகள் கார்களுக்கு, 6-வது ஆண்டிலிருந்து வரி இல்லாத ஏற்றுமதி வாய்ப்பு கிடைக்கும். இதன் மொத்த ஒதுக்கீடு 15-வது ஆண்டில் 88,000 யூனிட்டுகளாக உயர்ந்து, அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடரும்.
இது டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் மாருதி சுசூகி போன்ற இந்திய உற்பத்தியாளர்களுக்கு பெரும்பயனளிக்கும். அதேநேரம், உள்நாட்டு வெகுஜன சந்தை மின்சார வாகன பிரிவைப் பாதுகாக்க இந்தியா சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.