புதுடெல்லி: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மக்களவையில் நேற்று பேசியதாவது: “இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தால் அமெரிக்கா மட்டுமே பலன் அடையும். குறிப்பாக அந்த நாட்டில் இருந்து வேளாண் விளை பொருட்கள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட உள்ளது. இதனால் இந்திய விவசாயிகளுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும்.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளுக்கு பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. விவசாயிகளின் வருவாய் இரு மடங்காக உயரும் என்று பாஜக அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் விவசாயிகளின் நிலைமை மோசமாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.