புது டெல்லி: ஆம் ஆத்மி கட்சியில் நச்சுத்தன்மை வாய்ந்த சூழல் நிலவுவதாகவும், சமீப ஆண்டுகளில் அக்கட்சியின் செயல்பாடுகள் பெரிய அளவில் சீர்குலைந்து விட்டதாகவும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ள மாநிலங்களவை உறுப்பினரான ராகவ் சத்தா குற்றம் சாட்டினார்.
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த பின்னர் ராகவ் சத்தா வெளியிட்ட முதல் காணொலியில், “ ஒரு பட்டயக் கணக்காளராக எனக்குக் காத்திருந்த நம்பிக்கைக்குரிய பணிவாய்ப்பைத் துறந்து அரசியலுக்கு வந்தேன். நான் ஒரு தொழில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக அரசியலுக்கு வரவில்லை. நான் ஒரு அரசியல் கட்சி நிறுவப்படும்போதே அதன் உறுப்பினராக இணைந்தேன். எனது இளமைக் காலத்தின் பொன்னான பதினைந்து ஆண்டுகளை இந்தக் கட்சிக்காகவே அர்ப்பணித்தேன்.
ஆனால் இன்று, இந்தக் கட்சி முன்பு இருந்த அதே கட்சியாக இல்லை. இன்று, இந்தக் கட்சியில் ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த சூழல் நிலவுகிறது. நாடாளுமன்றத்தில் நாங்கள் பேசுவதும் தடுக்கப்பட்டது. எங்களைச் செயல்படவே விடவில்லை. மேலும், பொதுமக்களுக்கு சேவையாற்றுவதை விடத் தங்கள் தனிப்பட்ட நலன்களுக்காகவே செயல்படும் சில ஊழல்வாதிகள், சமரசவாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் அக்கட்சி சென்றுவிட்டது.
கடந்த சில ஆண்டுகளாக, “நான் சரியான மனிதனாக இருந்தாலும், ஒரு தவறான கட்சியில் இருக்கிறேனோ” என்று எனக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது.
கட்சியை விட்டு விலகுவது என முடிவெடுப்பதற்கு முன், அரசியலை விட்டு விலகுவது, கட்சிக்குள் இருந்து சீர்திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிப்பது அல்லது வேறொரு அரசியல் கட்சியில் இணைவது என மூன்று மாற்று வழிகளைப் பற்றி நான் தீவிரமாகச் சிந்தித்தேன்.
மொத்தம் 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலக முடிவெடுத்துள்ளனர். இது அக்கட்சிக்குள் பரவலான அதிருப்தி நிலவுவதையே உணர்த்துகிறது. ஒருவர் தவறு செய்யலாம், இருவர் தவறு செய்யலாம்; ஆனால் 7 பேர் ஒரே நேரத்தில் தவறு செய்ய முடியாது. பொதுமக்களின் பிரச்சினைகளை இன்னும் அதிக ஆற்றலுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து முன்னெடுத்துப் பேசுவேன்” என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, ஏழு ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதற்கு, மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று ஒப்புதல் அளித்தார். இதனால் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தற்போது மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 3ஆக குறைந்துள்ளது.