கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி தலை மையில் கொல்கத்தாவில் இன்று யோகா தின விழா நடை பெறுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக கொண்டாட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இதை ஏற்றுக் கொண்ட ஐ.நா. சபை ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக 2026-ம் ஆண்டுக்கான சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கொல்கத்தாவில் இன்று யோகா தின விழா நடைபெறுகிறது.
இதில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “கொல்கத்தா யோகா தின விழாவில் பங்கேற்க உள்ள பிரதமர் நரேந்திர மோடியை மனதார வரவேற்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “சர்வதேச யோகா தினத்தை ஒட்டி கொல்கத்தாவில் சிறப்பு ஓட்டம் நடைபெற உள்ளது.
3,000 ட்ரோன்கள் மூலம் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடத் தப்படும். ஹுக்ளி நதியில் 500 படகுகளில் யோகாசன நிகழ்ச்சி நடைபெறும்.
ரெட் ரோடு சாலையில் காலை 6.30 மணி அளவில் நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். அவரை வரவேற்க தலைநகர் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன’’ என்று தெரிவித்தார்.