புதுடெல்லி: மதம் மாறி இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு, ‘பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்’ என்று சாதி சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு இலந்தைகுளத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர், கடந்த 2015-ம் ஆண்டு இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறினார். தனது பெயரை சமீர் அகமது என மாற்றிக் கொண்டார். பின்னர், தனக்கு முஸ்லிம் லெப்பை என்ற சமூகப் பிரிவின் கீழ் சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இந்து மதத்தில் இருந்து இஸ்லாத்துக்கு மாறிய ஒருவர், தனது முந்தைய சமூக அடையாளத்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சான்றிதழ் கோர முடியாது என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, “இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் உள்ளிட்ட இந்து அல்லாத மதங்களுக்கு மாறியவர்கள், தங்களது முந்தைய சமூக அடையாளத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு பிரிவு 16(4)ன் கீழ் பிற்படுத்தப்பட்ட சமூக நிலைக்கான இடஒதுக்கீட்டை கோர முடியாது” என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், “நாடு முழுவதும் இது போன்ற விவகாரங்கள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வரும் நிலையில் அதில் முடிவு காண்பதற்கு முன்பாகவே தமிழ்நாடு விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது தவறு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.