கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் (டிஎம்சி) இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட முக்கியத் தலைவர் ஒருவர், தங்களுக்கு 50 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வராகச் சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றார். இந்நிலையில், தேர்தலில் தோல்வி அடைந்த திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் வெற்றி பெற்ற எம்எல்ஏ.க்கள் பலர் பாஜக.வுக்கு தாவ முயற்சித்து வருகின்றனர். எனினும், தற்போதைக்குத் திரிணமூல் கட்சியில் இருந்து வருபவர்களை கட்சியில் சேர்க்க வேண்டாம் என்று பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், திரிணமூல் தேசிய செய்தித் தொடர்பாளரும் மூத்த தலைவருமான ரிஜு தத்தா கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக தலைவர்களை வெகுவாகப் பாராட்டி பேசினார். தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையின் போது தனது குடும்பத்தைக் காப்பாற்றியதற்காகப் பாஜக தலைவர்களுக்கு ரிஜு தத்தா நன்றி தெரிவித்திருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, ரிஜுவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தார். இதை போல் மேலும் சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், ஓட்டல் ஒன்றில் கூடிய திரிணமூல் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் குழு, தங்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருப்பதாக உரிமை கோரியுள்ளது. இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ரிஜு தத்தா கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் தற்போது மகாராஷ்டிர மாடல் அரசியல் அரங்கேறி வருகிறது. எங்களிடம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உள்ளது. சுமார் 50 எம்எல்ஏ.க்கள் எங்களுடன் இணைந்து செயல்படுகின்றனர். நாங்கள்தான் உண்மையான திரிணமூல் காங்கிரஸ். எனவே, சோவன்தேப் சட்டோபாத்யாய்க்குப் பதிலாக ரிதப்ரதா பந்தோபாத்யாய் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார். பெரும்பான்மை எம்எல்ஏ.க்கள் எங்கள் வசம் இருப்பதால், கட்சியின் சின்னத்தை நாங்களே தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். இவ்வாறு ரிஜு தத்தா கூறியுள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் தங்களது கையெழுத்துகள் போலியாகப் போடப்பட்டுள்ளதாக, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரிதப்ரதா பந்தோபாத்யாய் மற்றும் சந்தீபன் சாகா ஆகிய திரிணமூல் மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த கையெழுத்து மோசடி தொடர்பாக சிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது 50 எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளதால், கட்சி 2 ஆக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், கட்சியும் சின்னமும் மம்தா பானர்ஜியின் கையை விட்டு செல்லும் சூழல் உருவாகி இருக்கிறது.
‘செய் அல்லது செத்து மடி’: கொல்கத்தாவில் மம்தா பேச்சு
திரிணமூல் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மீது சில நாட்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து திரிணமூல் எம்.பி. கல்யாண் பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இவற்றைக் கண்டித்தும் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டியும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்று தர்ணாவில் ஈடுபட்டார்.
அப்போது மம்தா பேசியதாவது: மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகள் உள்ளன. இதில் 177 தொகுதிகளில் பாஜக முறைகேடுகளை செய்து வெற்றி பெற்றுள்ளது. முதலில் எஸ்ஐஆர் மூலம் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தேர்தலின் போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்றன. நான் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தேன். ஆனால் முறைகேடுகளால் தோல்வி அடைந்தேன்.
சமீப காலமாக எனது கட்சித் தலைவர்களே துரோகிகளாக மாறி வருகின்றனர். எனக்கு எதிராகவும் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராகவும் சதி வேலைகளைச் செய்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஒன்று சொல்கிறேன். திரிணமூல் கட்சியைக் கட்டிக்காக்க ‘செய் அல்லது செத்துமடி’ என்ற வகையில் நாம் செயல்பட வேண்டும்.
பாஜகவுக்கு எதிரான இண்டியா கூட்டணி கட்சிகள் டெல்லியில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்த உள்ளன. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.