புதுடெல்லி: மேற்கு வங்கம் பவானிப்பூர் வாக்கு எண்ணும் மையத்தில் பாஜகவினரின் 2 கார்கள் நுழைய அனுமதிக்கப்பட்டதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள சகாவத் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில், ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் அங்கீகாரம் அற்ற நபர்கள் நுழைவதாக கூறி முதல்வர் மம்தா பானர்ஜி தனது கட்சியினருடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே கடந்த வியாழக்கிழமை 4 மணி நேரம் தர்ணா நடத்தினார்.
இதேபோல் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அரசு கல்லூரிகளில் சிசிடிவி கேமராக்கள் சில மணிநேரம் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என பாஜக செய்தி தொடர்பாளர் சாஜல் கோஷ் தெரிவித்தார்.
இந்நிலையில் மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா போட்டியிடும் பவானிப்பூரில் உள்ள வாக்கும் எண்ணும் மையத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தில் பாஜக கொடி பொருத்தப்பட்ட 2 கார்களை மத்திய ஆயுதப்படை போலீஸார் அனுமதித்தனர் என திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து அங்கிருந்து பாதுகாப்புப் படையினரிடம் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் புகார் கூறியபோது, அவர்களை வாக்கும் எண்ணும் மையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு பாதுகாப்புப் படையினர் விரட்டியதாகவும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த புகார் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் அளித்த விளக்கத்தில், ”பவானிப்பூர் வாக்கு மையம் அமைந்துள்ள ஹரீஸ் முகர்ஜி சாலை வழியாக பாஜக கொடி பொருத்திய வாகனம் கடந்து சென்றபோது அதில் போலீஸார் சோதனை நடத்தி, அதில் ஒன்றும் இல்லை என்று தெரிந்த பின்பே அந்த வாகனம் சாலையை கடக்க அனுமதி வழங்கப்பட்டது” என்றார்.