திருமலை: திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு மாதமும் ரூ.300 சிறப்பு தரிசனம் உட்பட அனைத்து ஆர்ஜித சேவைகள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான டிக்கெட் அனைத்தையும் ஆன்லைனில் வெளியிடுகிறது.
ஆனால் 3 நிமிடங்களில் அவை விற்றுத் தீர்ந்து விடுகிறது. சிலருக்கு மட்டுமே தரிசன டிக்கெட்கள் அல்லது இலவச டோக்கன்கள் கிடைக்கின்றன. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் அதிருப்தி அடைகின்றனர்.
யாரோ வேண்டுமென்றே பல டிக்கெட்களை முன்கூட்டியே முன்பதிவு செய்து விடுவதால்தான் இப்படி நடக்கிறது என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன.
இதுதொடர்பாக, திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஒவ்வொரு மாதமும் 2.69 லட்சம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களை தேவஸ்தானம் வெளியிடுகிறது. ஆனால், சராசரியாக ஒரே நேரத்தில் 6 லட்சம் பக்தர்கள் தலா 4 டிக்கெட் என்ற வீதத்தில் 24 லட்சம் டிக்கெட்களுக்கு முன்பதிவு செய்ய முயற்சிக்கின்றனர்.
பலர் ஒரே நேரத்தில் முயற்சிப்பதால்தான் டிக்கெட் முன்பதிவு செய்ய முடிவதில்லை. வங்கி சர்வர்களும் இதற்கு காரணமாகும். பல பக்தர்களும் விரைவில் இப்பிரச்சினையை சரி செய்ய தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்கும். அதுவரை வதந்திக்களை நம்ப வேண்டாம்’’ என தெரிவித்துள்ளது.