புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு புனேவில் நேற்று லோக்மான்ய திலகர் தேசிய விருது வழங்கப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரர் லோக்மான்ய பால கங்காதர் திலகரின் 106-வது நினைவு தினத்தை முன்னிட்டு, திலகர் அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி புனேவில் நேற்று நடைபெற்றது. இந்த விருது, நாட்டுக்கு சிறந்த பங்களிப்பை அளித்த தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது.
தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தியதில் அஜித் தோவலின் பங்களிப்புக்காக இந்த ஆண்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறக்கட்டளை தலைவர் ரோஹித் திலக் அறிவித்தார். இந்த விருதை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்கினார்.
இதுகுறித்து அஜித் தோவல், கூறும்போது, “திலகரின் பெயரில் வழங்கப்படும் இந்த விருதை ஏற்றுக்கொள்வதில் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இதை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார்.
இந்நிகழ்ச்சியில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, சுனேத்ரா பவார் ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மிக நீண்ட காலம் பணியாற்றிய அஜித் தோவல், நாட்டின் பாதுகாப்பு உத்தியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். மேலும் ஆபரேஷன் சிந்தூர், பாலகோட் வான்வழித் தாக்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.