மும்பை: நடிகர் டைகர் ஷெராப்பின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், ‘டெட் லெட்டர் பாக்ஸ்’ என்ற முறையில் ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தி நடிகர் டைகர் ஷெராப் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மும்பை, ஜூஹு பகுதியில் காரில் சென்றபோது, அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுதொடர்பாக, குணால், சுமித் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் மும்பை குற்றப்பிரிவு போலீஸார் வட்டாரம் கூறியதாவது: இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட குணால் கடந்த ஜூலை மாதம் சோனிபட் சிறையில் இருந்து விடுதலையானார். அதன் பிறகு, நண்பர் ஒருவர் அவரை அனில் பண்டிட்டுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார். தொடர்ந்து இருவரும் என்கிரிப்டட் செயலி மூலம் தகவல்களைப் பரிமாறி வந்துள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு அமிர்தசரஸில் இருந்து ஆயுதங்களைப் பெற்று, அவற்றை மும்பைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யுமாறு அனில் பண்டிட், குணாலிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, குணால், சுமித் ஆகிய இருவரும் ஆயுதங்களைப் பெறுவதற்காக அமிர்தசரஸ் சென்றுள்ளனர்.
அனில் பண்டிட் ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டிய இடத்தை முன்கூட்டியே இருவரிடமும் தெரிவித்துள்ளார். இந்தப் பணிக்காக அனில் பண்டிட், குணால் மற்றும் சுமித்துக்கு ரூ.70,000 முதல் ரூ.80,000 வரை வழங்கி உள்ளார். இந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், அமிர்தசரஸில் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஓர் இடத்தில் இருந்து, ‘டெட் லெட்டர் பாக்ஸ்’ எனப்படும் முறையில் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அதாவது, ஒருவர் மற்றொருவரை நேரடியாக சந்திக்காமல், அவர் வந்து எடுத்துச் செல்வதற்காக முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஓர் இடத்தில் பொருளை வைத்துச் செல்லும் முறையே ‘டெட் லெட்டர் பாக்ஸ்’ எனப்படுகிறது.
இதையடுத்து, ஆயுதங்களைக் கொண்டு செல்லும் பணிக்காக குணால் தனது காதலியான ராதா, அவரது தோழி பபிதாவை ஈடுபடுத்தி உள்ளார். இதற்காக, அவர்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆயுதங்களை மும்பைக்குக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.