புதுடெல்லி: ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் அழைப்பு விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை இணைஅமைச்சர் பஜித்ரா மார்கெரிட்டா மற்றும் பிஹார் ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஈரான் செல்கின்றனர் என்று வெளியுறவு அமைச்சகம் நேற்று அறிவித்தது.
இந்நிலையில், காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தியும் இறுதி அஞ்சலி செலுத்த ஈரான் செல்கிறார். ஈரான் உச்ச தலைவரின் அலுவலகத்தில் சர்வதேச உறவுகள் துறை இயக்கு நராக உள்ள மொஹ்சென் கும்மி, மெஹபூபாவை இந்தியாவின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், “ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நீண்டகால ராஜாங்க உறவுகள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் சிறப்பு விருந்தினராக இச்சடங்கில் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறேன். தங்களது வருகை, பண்டைய நாகரிகங்களான நம் இரு நாடுகளுக்கு இடையேயான ஆழமான நட்பையும் பரஸ்பர மரியாதையையும் எடுத்துக்காட்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மெஹபூபா முப்தி கூறும்போது, “இந்த அழைப்பைப் பெற்றது எனக்குக் கிடைத்த பெரும் கவுரவம். உச்ச தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த நான் ஈரான் செல்வேன்” எனத் தெரிவித்தார். கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரான் மீது தொடுத்த போரில் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். போர் தொடர்ந்து நடைபெற்று வந்ததால், அவரது உடல் இதுவரை பாதுகாக்கப்பட்டு வந்தது. தற்போது போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால், அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
நிகழ்ச்சி நிரலின்படி, ஜூலை 3-ம் தேதி டெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி பெருங் மோசல்லா வளாகத்தில் உச்ச தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படும். அடுத்த நாள் நினைவேந்தல் நிகழ்ச்சியும், ஜூலை 6-ம் தேதி இறுதி ஊர்வலமும் நடைபெறும். இதனிடையே, இப்போதைய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி பாதுகாப்பு கருதி தனது தந்தை அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.