வாராணசி: வாராணசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் துப்பாக்கியில் இருந்து தவறுதலாக இரண்டு குண்டுகள் வெடித்ததில் 3 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இதுகுறித்து காவல் துறை துணை ஆணையர் கவுரவ் பன்சால் கூறுகையில், “கோயிலின் 4-வது நுழைவாயிலில் பணியில் இருந்த பிஏசி ஆயுதப்படை காவலரின் கையிலிருந்த கார்பைன் துப்பாக்கி தவறுதலாக நழுவி கீழே விழுந்தது. இதில் துப்பாக்கியில் இருந்து இரண்டு குண்டுகள் வெளியே பாய்ந்தன.
இரு குண்டுகளும் தரையில்தான் பாய்ந்தன என்றாலும் தரையில் பட்டு, குண்டுகளின் துகள்கள் சிதறியதில் அங்கு பூ வியாபாரம் செய்து கொண்டிருந்த நிக்கி குப்தா, ராம்பாபு, விகாஸ் யாதவ் ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர்.
ஒருவருக்கு கையிலும், மற்றொருவருக்கு இடுப்பிலும், மூன்றாவது நபருக்கு காலிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல் நிலை சீராக உள்ளது” என்றார்.