புதுடெல்லி: அரசு அலுவலகங்கள் உட்பட முக்கிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள சீனக் கேமராக்கள் வாயிலாக நடைபெறும் வெளிநாட்டு கண்காணிப்பு மற்றும் ஆன்லைன் செயலிகள் மூலம் ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பும் ஆபத்திற்குள்ளாக்குவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவை இருளில் வைத்திருப்பதற்கான ஒரு திட்டமிட்ட சதி என்று குற்றம்சாட்டி பேஸ்புக்கில் ராகுல்காந்தி வெளியிட்ட பதிவில், “பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சீன சிசிடிவி கேமராக்களை அரசு சமீபத்தில் தடை செய்தது. இருப்பினும், அரசு கட்டிடங்களுக்குள் சீனக் கேமராக்கள் தொடர்ந்து நிறுவப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட சீனச் செயலிகள் பெயர்கள் மாற்றப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வருகின்றன. வெளிநாட்டு செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் நம் நாட்டின் முக்கியமான தரவுகளை சேமித்து வருகின்றன. ஆனால் இது குறித்துச் சொல்வதற்கு அரசிடம் எதுவுமே இல்லை.
நாடாளுமன்றத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் இந்தக் கேள்விகளை எழுப்பினேன். அதற்கு அளிக்கப்பட்ட பதிலில் ஏராளமான வார்த்தை ஜாலங்கள் இருந்தனவே தவிர, கேட்கப்பட்ட குறிப்பிட்ட கேள்விகளுக்கு எவ்விதப் பதிலும் அளிக்கப்படவில்லை.
நமது நாட்டில் பயன்பாட்டில் உள்ள கேமராக்கள் எந்தெந்த நாடுகளிலிருந்து பெறப்பட்டன? பாதுகாப்பு கண்ணோட்டத்தில் அவற்றில் எத்தனை கேமராக்கள் சான்றளிக்கப்பட்டவை?. எந்தெந்த வெளிநாட்டு ஏஐ தளங்கள் அரசுத் தரவுகளைச் செயலாக்கி வருகின்றன? தடை செய்யப்பட்ட எந்தெந்த செயலிகள் மாற்றப்பட்ட பெயர்களில் தொடர்ந்து இயங்கி வருகின்றன? என்று நான் கேள்வி எழுப்பினேன். ஆனால், அமைச்சகத்தின் பதிலில் எவ்வித புள்ளிவிவரங்களோ, பதில்களோ இல்லை; ஏன், ஒரே ஒரு தளத்தின் பெயர்கூட குறிப்பிடப்படவில்லை.
அரசாங்கம் பயன்படுத்தும் பத்து லட்சம் சீனத் தயாரிப்பு கேமராக்கள் தரவுப் பரிமாற்றம் தொடர்பாகப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே ஒப்புக்கொண்ட பிறகும், இன்று நம்மை கண்காணித்து வரும் கேமராக்கள் பாதுகாப்பானவையா இல்லையா என்பதை வெளியிட அரசாங்கம் இப்போதும் தவறிவிட்டது.
தனது சொந்தத் தோல்விகளை மறைக்கவும், வெளிநாட்டு கண்காணிப்பின் எதார்த்தத்தை மறைக்கவும் முயற்சிப்பதன் மூலம், மோடி அரசாங்கம் ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்தி வருகிறது" என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
மார்ச் 25 அன்று மக்களவையில் ராகுல் காந்தி ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அதற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா பதிலளிக்கையில், டிஜிட்டல் தொழில்நுட்பங்களால் ஏற்படும் இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து இந்திய அரசாங்கம் முழுமையாக விழிப்புணர்வுடன் இருப்பதாகத் தெரிவித்தார். கடந்த 12 ஆண்டுகளில், இந்தியாவின் டிஜிட்டல் சூழலமைப்பை வலுப்படுத்துவதற்காகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.