இந்தியா

எஸ்ஐஆர் மூலம் நீக்கப்பட்டவர்கள் அரசு நலத் திட்டங்களை பெற முடியாது: மேற்கு வங்கம், பிஹார் மாநில அரசுகள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

கொல்கத்தா/பாட்னா: மேற்கு வங்​கத்​தில் முதல்​வர் சுவேந்து அதிகாரி தலை​மை​யில் புதிய பாஜக அரசு கடந்த சனிக்​கிழமை பதவியேற்​றது. இந்த அரசின் முதல் அமைச்​சர​வைக் கூட்​டம் கடந்த திங்கள் ​கிழமை நடை​பெற்​றது.

இந்​தக் கூட்​டத்​துக்கு பிறகு செய்​தி​யாளர்​களிடம் முதல்​வர் சுவேந்து அதி​காரி கூறுகை​யில், “அரசின் அனைத்து சமூக நலத்திட்​டங்​களும் - அவை 10 ஆண்​டு​க்கு முன் அல்​லது 30 ஆண்டுக்கு முன் தொடங்​கப்​பட்​ட​வை​யாக இருந்​தா​லும் தொடர்ந்து செயல்படுத்​தப்​படும். எனினும், இறந்​தவர்​கள், சட்​ட​விரோத​மாக ஊடுருவிய​வர்​கள் அல்​லது இந்​தி​யர் அல்​லாத எவரும் மேற்கு வங்க மக்களுக்​கான நலத் திட்​டங்​களை பெற அனு​ம​திக்​கப்பட மாட்​டார்​கள்” என்​றார்.

இந்​நிலை​யில் எஸ்​ஐஆர் நடவடிக்​கை​யின் கீழ் வாக்​காளர் பட்டியலில் இருந்து நீக்​கப்​பட்​ட​வர்​கள் அரசு நலத்​திட்ட உதவிகளை பெற முடி​யாது என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. எனினும் எஸ்​ஐஆர் நடவடிக்​கை​யில் பெயர் நீக்கப்​பட்​டதற்கு எதி​ராக தீர்ப்​பா​யத்​தில் முறை​யீடு செய்தவர்களுக்கு அதில் இறுதி முடிவு எடுக்​கப்​படும் வரை நலத்திட்ட உதவி தொடரும். அதன் பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்​றும் தெரி​வித்​துள்​ளது.

மேற்கு வங்க உணவு வழங்​கல் துறை அமைச்​சர் அசோக் கீர்த்​தனியா கூறுகை​யில் “குடி​யுரிமைத் திருத்​தச் சட்​டத்​தின் கீழ் குடியுரிமை கோரி விண்​ணப்பித்​துள்​ளவர்​கள் அனைத்து அரசு திட்டங்​களை​யும் பெறலாம். ரேஷன் அட்​டைகள் சரி​பார்க்கப்படும்” என்​றார்.

இது​போல் பிஹார் தலைநகர் பாட்​னா​வில், முதல்​வர் சாம்​ராட் சவுத்ரி கூறுகை​யில் “பிஹாரில் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​ட​வர்​கள், ரேஷன் பொருட்​கள், பிற நலத்​திட்​டங்​கள் உட்பட எந்​தவொரு அரசு சலுகை​யை​யும் பெற முடி​யாது. இவர்களின் வங்கி பாஸ் புத்​தகங்​களும் உரிய காலத்​தில் ரத்து செய்​யப்​படும்” என்​றார்.

பிஹார் உணவு மற்​றும் நுகர்​வோர் பாது​காப்​புத் துறை அமைச்​சர் அசோக் சவுத்ரி கூறுகை​யில், “மாநிலத்​தில் எஸ்​ஐஆர் நடவடிக்​கைக்கு பிறகு, ரேஷன் அட்​டை​தா​ரர்​களில் இருந்து சுமார் 5 லட்​சம்​ பேர்​ நீக்​கப்​பட்​டுள்​ளனர்​” என்​றார்​.

SCROLL FOR NEXT