இந்தியா

‘இந்த சாலை முஸ்லிம்களுக்கானது அல்ல’ - இந்து அமைப்பினர் சுவர் எழுத்துகளால் காஜியாபாத்தில் சர்ச்சை

ஆர்.ஷபிமுன்னா

புது டெல்லி: உத்தரப் பிரதேசம் காஜியாபாத்தில், ‘இந்த சாலை முஸ்லிம்களுக்கானது அல்ல’ என்ற சுவர் எழுத்துகளால் சர்ச்சை கிளம்பியுள்ளது. இவற்றை இந்துத்துவா அமைப்பான இந்து ராக்ஷா தளம் எழுதியது காட்சிப்பதிவாகி வைரலாகிறது.

உ.பி.யின் காஜியாபாத்திலுள்ள டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் உள்ள கட்டிடங்களில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் காணப்படுகின்றன. இவற்றில் இந்துத்துவா அமைப்பினரால், ’இந்த சாலை முஸ்லிம்களுக்கானது அல்ல’ என்ற வாசகங்களை எழுதப்பட்டுள்ளது. காஜியாபாத்தின் இந்து ரக்ஷா தளம் ஆர்வலர்களின் காட்சிப்பதிவுகள் சமூகவலைதளங்களில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய வாசகங்கள்வெளியாகியுள்ளன.

          

இவற்றை இந்து ரக்ஷா தளத்தின் தலைவரான பூபேந்திர தோமர் என்ற பிங்கி சவுத்ரி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த பகிர்வு குறித்து இந்து ரக்ஷா தளத்தின் தலைவர் பிங்கி சவுத்ரி, ’எங்கள் அமைப்பினரில் சிலர் நெடுஞ்சாலையில் உள்ள கட்டிடங்களின் சுவர்களில் முஸ்லிம்கள் சாலையைப் பயன்படுத்துவதைத் தடுக்க எழுதத் தொடங்கியுள்ளனர்.

நாங்கள் வரி செலுத்துகிறோம், ஆனால் ஜிஹாதிகள் அனைத்து அரசாங்கத் திட்டங்களின் பலனையும் பெறுகிறார்கள். அரசாங்கம் நமக்கு சகோதரத்துவத்தை கற்பிக்கிறது. ஆனால், அனைத்து பெரிய கோயில்களின் வருவாய் அரசாங்கங்களின் கருவூலங்களுக்கு செல்கிறது. இதுபோல், மசூதிகளிலிருந்து அரசு எதையும் பெறுவதில்லை என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மீது பிங்கி மேலும், முஸ்லிம்கள் பொது வசதிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர், ‘அரசாங்கம் முஸ்லிம்களுக்கு அனைத்து அரசு சேவைகளையும், நலன்களையும் பறிக்க வேண்டும்.

இந்து வாக்காளர்கள் அரசாங்கத்தை அமைக்க உதவுகிறார்கள், ஆனால் பலன் இந்த ஜிஹாதிகளை போய் சேருகிறது.’ எனத் தெரிவித்துள்ளார். வைரலாகி வரும் இக்காட்சிப் பதிவால் உ.பி.யில் சர்ச்சை கிளம்பியுள்ளது.

SCROLL FOR NEXT