

செங்கல்பட்டு: நடிகர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி அவருடைய மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கை குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.
முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யிடமிருந்து தனக்கு சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் விவாகரத்து கோரி இங்கிலாந்து பிரஜையான அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: எனக்கும், விஜய்க்கும் கடந்த 1998 ஜூலை 10-ல் இங்கிலாந்தில் பதிவுத் திருமணம் நடந்தது.
அதன்பிறகு எங்களது திருமணம் இந்து முறைப்படி 1999 ஆக.25-ல் சென்னை ராஜா முத்தையாமன்றத்தில் நடந்தது. எனது கணவர் தற்போது தவெக கட்சியைத் தொடங்கி அதன் தலைவராக உள்ளார்.
எங்களுக்கு ஜேசன் சஞ்சய் (25) என்ற மகன், திவ்யா சாஷா(20) என்ற மகள் உள்ளனர். தொடக்கத்தில் எங்களது இல்லற வாழ்க்கையில் பிரச்சினையின்றி சுமூகமாக சென்றது. படப்பிடிப்பு இல்லாத காலகட்டங்களில் நாங்கள் குடும்பத்துடன் இங்கிலாந்துக்கு சென்றுவிடுவோம்.
அதேபோல நானும் படப்பிடிப்பு தளங்களுக்கும், திரைப்படங்கள் தொடர்பான நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளேன். சில நேரங்களில் எங்களுக்குள் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை நாங்களே சரிசெய்துகொண்டு வாழ்க்கையை சீராக நடத்தி வந்தோம்.
ஆனால் கடந்த 2021 ஏப்ரல் மாதம் எனது கணவருக்கும், ஒரு நடிகைக்கும் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனால் மனதளவில் பாதிப்படைந்தேன். அதன்பிறகு அந்த உறவைத் துண்டித்து விடுவதாக விஜய் உறுதியளித்தார்.
ஆனால் அதன்படி அவர் நடந்துகொள்ளவில்லை. இந்தப் பிரச்சினையை சுமூகமாகப் பேசி ஒரு முடிவுக்கு கொண்டுவர எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. குழந்தைகள் எதிர்காலம் கருதி நானும் அமைதிகாத்து வந்தேன்.
ஆனால் விஜய் என்னுடன் இருந்த திருமண பந்தத்தை அறவே துண்டித்துக் கொண்டதால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதித்து தனிமைப்படுத்தப்பட்டேன்.
இந்நிலையில் மனைவி என்ற முறையில் எனக்கும், குடும்பத்துக்கும் வழங்கி வந்த அனைத்து நிதி உதவிகளையும் எனது கணவர் விஜய் நிறுத்தி விட்டார். தற்போது எங்களுக்குள் எந்த உறவும் இல்லை. எனவே எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும். இவ்வாறு தனது மனுவில் சங்கீதா கூறியிருந்தார்.
இ்ந்த மனுவை விசாரித்த செங்கல்பட்டு முதன்மை அமர்வுநீதிமன்றம், இந்த வழக்கை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கு ஏப்.20-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.