கொல்கத்தா: தற்போதைய மேற்கு வங்க தேர்தல், முதல்வர் மம்தா பானர்ஜியின் கவுரவத்துக்கான போராட்டம் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஜாதவ்பூர் தொகுதி எம்.பி. சயோனி கோஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: முதல்கட்ட தேர்தல் நடைபெற்ற 152 தொகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களை நாங்கள் வெல்வோம். இந்தத் தொகுதிகளில் எங்கள் கட்சியின் கோட்டைகளாகக் கருதப்படும் முர்ஷிதாபாத், கிழக்கு, மேற்கு மிட்னாபூர், புரூலியா, பாங்குரா, ஜார்கிராம், பிர்பூம் போன்ற பகுதிகளும் அடங்கும்.
களத்திலிருந்து வரும் தகவல்கள் எங்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளன. மக்கள் எங்களுக்கு ஆதரவளிக்க திரண்டு வருகின்றனர். இது வங்காளத்தின் மற்றும் மம்தா பானர்ஜியின் கவுரவத்துக்கான ஒரு போராட்டம். நாங்கள் வெற்றி பெறுவோம். வங்காளம் வெற்றி பெறும். முதல்கட்ட தேர்தலில் ஆண்களை விடப் பெண்கள் இரண்டு சதவீதம் கூடுதலாக வாக்களித்துள்ளனர். இது திரிணாமுல் கட்சியின் வெற்றிக்கான அறிகுறியாகும்.
முதல்கட்ட தேர்தலில் சாதனை அளவாக 93% வாக்குகள் பதிவாகியுள்ளது. இது மாற்றத்துக்கான வாக்கு என்று பாஜக கூறுகிறது. ஆனால் அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. பாஜக தலைவர்கள் 365 நாட்களும் இங்கேயே தங்கியிருந்தாலும் பாஜகவால் வெற்றி பெற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.