புதுடெல்லி: ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா, தமிழகத்தின் குலசேகர பட்டினத்துக்கு அடுத்ததாக நாட்டின் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டம் அருகே அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
குஜராத் சட்டப்பேரவையில் பட்ஜெட் கோரிக்கை குறித்து அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சர் அர்ஜுன் மோத்வாடியா பேசுகையில், ”ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடம் கிர் சோம்நாத் மாவட்டம் அருகே அரபிக் கடல் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
விண்வெளித் துறையின் கீழ் செயல்படும் இன்-ஸ்பேஸ் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்திய பிறகு இந்த இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. நமது வேண்டுகோள்படி ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு பொருத்தமான இடத்தை இன்-ஸ்பேஸ் நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. இதை ஸ்ரீ ஹரிகோட்டா போல் மேம்படுத்த முடியும்” என்றார்.
இது குறித்து விண்வெளித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”இந்தியாவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணியில் மாநில அரசு அல்லது தனியார் நிறுவனம் கூட ஈடுபடலாம். விண்வெளித் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் மூலம் இதற்கான நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து செயற்கைக் கோள்களை ஏவுவதற்கான பணிகளை மேற்கொள்ள இன்-ஸ்பேஸ் நிறுவனத்தின் முன் அனுமதி தேவை” என்றார்.